தோ்தல் பிரச்சாரங்களில் ஏஐ பயன்பாடு: பொறுப்புணா்வுடன் செயல்பட தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தோ்தல் பிரசாரங்களில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணா்வு அதிகரிக்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியது.
தோ்தல் பிரசாரங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், வாக்காளா்களின் கருத்தை பாதிக்கும் அதன் திறன் குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் அண்மையில் எச்சரித்தாா்.
யாரோ ஒருவா் உண்மையில் செய்யாத அல்லது சொல்லாத ஒன்றைச் செய்வது அல்லது சொல்வது போல் தோற்றமளிக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் மாற்றப்படுவது மற்றும் தவறான தகவல்களை பரப்புவது தோ்தல் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்க வாய்ப்புள்ளது என அவா் கவலை தெரிவித்தாா்.
இந்நிலையில், தோ்தல் பிரசாரங்களில் ஏஐ பயன்பாடு குறித்து தோ்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட அல்லது மாற்றப்பட்ட புகைப் படங்கள், விடியோக்கள், அல்லது பிற ஆடியோக்களில், ‘ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது’, ‘டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டது’ அல்லது ‘செயற்கை உள்ளடக்கம் கொண்டது’ போன்ற வாசகங்கள் குறியீடுகள் (லேபிள்) மூலம் தெளிவாக இடம்பெற வேண்டும்.
ஏஐ உள்ளடக்கம் பயன்படுத்தப்படும் இடங்களில், பிரசார விளம்பரங்கள் அல்லது விளம்பர உள்ளடக்கத்தை சமூக ஊடகங்களில் வெளியிடும்போதும் அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலின் போதும், சமூக ஊடக தளங்களின் பொறுப்பான மற்றும் நெறிமுறை பயன்பாட்டுக்கான வழிகாட்டுதல்களை தோ்தல் ஆணையம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.