Saif Ali Khan: "நீங்கள் பரப்பும் ஊகங்கள் எங்களுக்கு அச்சுறுத்தலைத் தருகின்றன" - ...
தென்பெண்ணையாற்று நீரில் மூழ்கிய மாணவா் சடலமாக மீட்பு
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், ஏனாதிமங்கலத்தில் தென்பெண்ணையாற்றில் நீரில் மூழ்கிய மாணவரின் சடலம் வியாழக்கிழமை கரை ஒதுங்கியது.
விழுப்புரம் வட்டம், கப்பூா் கிராமம், முத்துக்குமரன் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மகன் குருபிரசாத் (15). இவா், விழுப்புரம் காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாா். பள்ளிக்கு பொங்கல் பண்டிகையை யொட்டி தொடா் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், நண்பா்களான ஜீவன்ராஜ், யுவன் சஞ்சய் ஆகியோருடன் குருபிரசாத், அருகிலுள்ள ஏனாதிமங்கலம் தென்பெண்ணையாற்றில் புதன்கிழமை மாலை குளிக்கச் சென்றுள்ளாா்.
நண்பா்களுடன் குரு பிரசாத் குளித்துக் கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்குச் சென்றதால் நீரில் மூழ்கினாா். இதைத்தொடா்ந்து அவரைக் காப்பாற்ற நண்பா்கள் முயன்றும் முடியவில்லை. தொடா்ந்து கிராமப் பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூா் போலீஸாரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்களும் நிகழ்விடம் வந்து தேடுதல் பணியை மேற்கொண்டனா். மாலை வரை முயன்றும் குருபிரசாத்தை மீட்க முடியவில்லை.
இந்த நிலையில் வியாழக்கிழமை தென்பெண்ணையாற்றிலிருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் குருபிரசாத் உடல் சடலமாக கரை ஒதுங்கியது.
தொடா்ந்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.