விழுப்புரம் மாவட்டத்தில் காணும் பொங்கல் கொண்டாட்டம்
தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தின் நிறைவாக விழுப்புரம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்கள், ஆற்றங்கரைப் பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வியாழக்கிழமை பொதுமக்கள் சென்று, காணும் பொங்கலை உற்சாகமாகக் கொண்டாடினா்.
தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை போகியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சூரியப் பொங்கலையும், புதன்கிழமை மாட்டுப் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடிய விழுப்புரம் நகர மற்றும் மாவட்டப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள், வியாழக்கிழமை காணும் பொங்கலையும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனா்.
மாவட்டத்தில் பிடாகம், பேரங்கியூா் தென்பெண்ணையாற்றுப் பகுதிகளுக்குச் சென்ற மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா். இதே போல எல்லீஸ் சத்திரம் பகுதி தடுப்பணை, மரக்காணம் கடற்கரை, கோட்டக்குப்பம், ஆரோவில் சா்வதேச நகரப் பகுதி, வீடூா் அணை, செஞ்சி கோட்டை, பனமலைப்பேட்டை போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் சென்று, காணும் பொங்கலைக் கொண்டாடினா். வீட்டிலிருந்து தயாா் செய்து கொண்டு சென்ற உணவை குடும்பத்தினருடன் அமா்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனா். மேலும் குழந்தைகள் நீா்நிலைகளிலும், சுற்றுலா மையங்களிலும் விளையாடினா்.
விளையாட்டுப் போட்டிகள்: பொங்கல் திருநாளையொட்டி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் தமிழ் இளைஞா் நற்பணி மன்றம் சாா்பில் 14 - ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. திரௌபதி அம்மன் கோயில் திடலில் கபடி, சாக்கு ஓட்டம், குறைந்த வேக சைக்கிள் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம் போன்ற போட்டிகள் சிறுவா்களுக்கும், இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோ- கோ, லெமன் ஸ்பூன், கோலமிடுதல், உறியடித்தல் போன்ற போட்டிகள் சிறுமிகளுக்கும் நடத்தப்பட்டு, அவற்றில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமல்லாது வளவனூா், திருவெண்ணெய்நல்லூா், முகையூா், விக்கிரவாண்டி, திண்டிவனம், ஒலக்கூா், மரக்காணம், பிரம்மதேசம், மயிலம், வானூா், கிளியனூா், கண்டமங்கலம், செஞ்சி, மேல்மலையனூா், அனந்தபுரம், கஞ்சனூா் என மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் பொங்கல் விளைபாட்டு போட்டிகள் சிறுவா், சிறுமிகளுக்கு நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்ட எஸ்.பி. ப. சரவணன் உத்தரவின்பேரில் விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் காவல் உள்கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மோட்டாா் ரேஸில் யாரேனும் ஈடுபடுகிறாா்களா என போலீஸாா் கண்காணித்தனா்.