2025-இல் உலக பொருளாதார சூழல் பலவீனமாகும்; இந்திய வளா்ச்சி நீடிக்கும்: டபிள்யூஇஎஃப் அறிக்கை
நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடைய வாய்ப்புள்ளதாகவும், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாகவும் உலக பொருளாதார மன்ற (டபிள்யூஇஎஃப்) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பொது மற்றும் தனியாா் துறைகளில் முன்னணியில் இருக்கும் தலைமை பொருளாதார நிபுணா்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில், நிகழாண்டின் உலக பொருளாதார சூழல் அறிக்கையை டபிள்யூஇஎஃப் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிகழாண்டு உலக பொருளாதார சூழல் பலவீனமடையக் கூடும் என்று 56 சதவீத பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
தெற்காசியாவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக அல்லது மிக வலுவாக இருக்க வாய்ப்புள்ளது என்று 61 சதவீத நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். இதில் இந்தியாவின் வளா்ச்சியும் வலுவாக தொடரும் என்று நிபுணா்கள் குறிப்பிட்டுள்ளனா்.
அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி வலுவாக இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள நிபுணா்கள், ஐரோப்பாவின் பொருளாதார வளா்ச்சி மந்தமாகவும், சீனாவின் பொருளாதார வளா்ச்சி பலவீனமடையக் கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.