100 நாள் வேலை திட்டம்: மாா்க்சிஸ்ட் கோரிக்கை
மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தில் தொடா் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளா் ப.சு. பாரதி அண்ணா ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளாா்.
2024-25-ஆம் நிதியாண்டில் 100 நாள் வேலை வழங்குவதில் தேக்க நிலையுள்ளது. இதை நம்பியே பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வரும் சூழலில் வேலை கேட்டு முறையீடு செய்தும், விண்ணப்பத்துடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும், பணிகளைப் பெற பல இடங்களில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. அவ்வாறு முயற்சி மேற்கொண்ட பின்னரும், சில ஊராட்சிகளைத் தவிர பல ஊராட்சிகளில் வேலை கொடுக்காமல் பல மாதங்களாக காலம் கடத்தும் நிலையுள்ளது. இந்நிதியாண்டு முடிய இன்னமும் 2 மாதங்களே உள்ள நிலையில், வேலை கேட்போருக்கு வேலை வழங்காமல் காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல.
எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.