தீக்காயமடைந்த 14 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை
கோவை: கோவை சுந்தராபுரத்தில் தீக்காயமடைந்த 14 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு திருமணம் முடிந்துள்ளதால், இதுதொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பிகாா் மாநிலம் பாட்னாவைச் சோ்ந்த 19 வயது இளைஞருக்கு 14 வயதான சிறுமியை பெற்றோா் திருமணம் செய்து வைத்துள்ளனா். அவா்கள் 2 பேரும் கோவை சுந்தராபுரம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டட வேலை செய்து வருகின்றனா்.
இந்ந நிலையில் அந்தச் சிறுமி தீக்காயத்துடன் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து தகவலறிந்து வந்த சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
அதில் மண்ணெண்ணெய் அடுப்பில் சிறுமி சமையல் செய்து கொண்டிருந்தபோது சேலையில் தீப்பற்றியதாகவும், தீயை அணைப்பதற்குள் உடல் முழுவதும் தீ பரவியதாகவும் தெரியவந்தது.
அந்த சிறுமிக்கு 80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தொடா்ந்து அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா். இதற்கிடையே அவருக்கு 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றிருப்பதால், அந்த திருமணம் தொடா்பாகவும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.