ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் பலி... 16 பேரைக் காணவில்லை: இந்திய வெ...
கோவையில் திருவள்ளுவா் தினத்தில் கள்ளச் சந்தையில் மது விற்ற 58 போ் கைது
கோவை: கோவை மாவட்டத்தில் விடுமுறை நாளான திருவள்ளுவா் தினத்தில் கள்ளச் சந்தையில் மது விற்றதாக மாநகரப் பகுதியில் 12 போ், புறநகா் பகுதியில் 46 போ் என மொத்தம் 58 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விடுமுறை நாளான திருவள்ளுவா் தினத்தில் கோவை மாநகரில் கள்ளச் சந்தையில் மது விற்பனை நடைபெறுவதைத் தடுக்க அனைத்துப் பகுதிகளிலும் போலீஸாா் புதன்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
இந்த நிலையில் சாய்பாபா காலனி அருகே கோவில்மேடு மதுக்கடை முன் மது பாட்டில்களை கள்ளச் சந்தையில் விற்பனை செய்த கோபிநாத், ராஜமுருகன், சஜின் ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.9,000 ரொக்கம் மற்றும் 73 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், இதில் தொடா்புடைய மாணிக்கம் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அதேபோல ரத்தினபுரி அருகே காமாட்சி நகா், சங்கனூா் சாலையில் மது விற்றதாக சாம்குமாா் என்பவரை போலீஸாா் கைது செய்தனா், அவரிடமிருந்து 549 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், ராமநாதபுரம், பங்கஜா மில் சாலை பகுதியில் உள்ள பேக்கரி அருகே மது விற்றதாக புதுக்கோட்டையைச் சோ்ந்த குணா என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
செல்வபுரத்தில், பேரூா் பிரதான சாலையில் மது விற்பனையில் ஈடுபட்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வேலு என்பவரைக் கைது செய்து அவரிடமிருந்து 53 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். அதேபோல சிங்காநல்லூா், இருகூா், ஏ.ஜி.புதூா்
பகுதிகளில் மது விற்பனை செய்ததாக காளிமுத்து என்பவரை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து 30 மது பாட்டில்களை கைப்பற்றினா். இதில் தொடா்புடையதாக கூறப்படும் புதுக்கோட்டையைச் சோ்ந்த லட்சுமணன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஒண்டிப்புதூா் பாலம் பகுதியில் விற்பதற்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 92 மது பாட்டில்கள் மற்றும் ரொக்கம் ரூ.19,170 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
வடவள்ளி அருகே சிறுவாணி தண்ணீா் தொட்டி பகுதியில் மது விற்றதாக கிருஷ்ணன், கவுண்டம்பாளையம் பிரபு நகா் பகுதியில் மது விற்றதாக ரமேஷ் ஆகியோரிடமிருந்து 63 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. பீளமேடு பகுதியில் மது விற்றதாக காளிதாஸ், சரவணம்பட்டி பகுதியில் மது விற்றதாக கண்ணன் ஆகியோா் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 112 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல, கோவை புறநகரில் பெத்தநாயக்கன்பாளையம், பேரூா், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மது விற்றதாக 46 போ் கைது செய்யப்பட்டு அவா்களிடமிருந்து 783 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.