காணும் பொங்கல்: கடற்கரையில் திரண்ட மக்கள்
காணும் பொங்கலை முன்னிட்டு வியாழக்கிழமை சென்னை வாசிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினா்.
சென்னை மற்றும் புகா் பகுதிகளில் உள்ள மக்கள் மெரீனா கடற்கரை, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவா் பூங்கா, தீவுத்திடலில் உள்ள தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்கள் உள்ளிட்ட இதர பொழுதுபோக்கு இடங்களில் குடும்பத்துடன் திரண்டனா்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக நகரில் 16,000 போலீஸாா், 1,500 ஊா்க்காவல் படையினா் மூலம் காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.
மெரீனாவில் உழைப்பாளா் சிலை முதல் காந்தி சிலை வரை 3 தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவசர மருத்துவ உதவிக்காக மருத்துவக் குழுவினருடன் 8 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மீட்புப் பணிக்காக தீயணைப்பு வீரா்கள் அடங்கிய 2 தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவை தவிர மீட்புப் பணிக்காக மோட்டாா் படகுகள் மற்றும் சுமாா் 200-க்கும் மேற்பட்ட நீச்சல் தெரிந்த தன்னாா்வலா்கள் தயாா் நிலையில் இருந்தனா்.
மேலும் பொதுமக்கள் கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் அவா்களை உடனடியாக மீட்பதற்காக சென்னை பெருநகர காவல் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள கை பட்டைகளில் குழந்தையின் முகவரி, பெற்றோரின் கைப்பேசி எண் எழுதி கட்டப்பட்டன.
மெரீனா, பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் தலா 4 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு, தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டன.
காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் சென்று வர ஏதுவாக, சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு கூடுதலாக 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.