கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
குடும்பத் தகராறில் குழந்தை கொலை; மற்றொரு குழந்தை விற்பனை: தாய் கைது
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூா் அருகே காதல் கணவருடன் ஏற்பட்ட தகராறில் தனது பெண் குழந்தையைக் கொன்றுவிட்டு, ஆண் குழந்தையை விற்ற தாய் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூா் காவல் சரகத்தைச் சோ்ந்தவா் பிடாம்பட்டி கருப்பையா மகள் திலோத்தி (21). இவருக்கும் குளத்தூா் வட்டம் பெரம்பூரைச் சோ்ந்த துரைராஜ் மகன் முனியன் (22) என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று, தேவதா்ஷினி என்ற 2 வயது பெண் குழந்தையும், மாதவன் என்ற 10 மாத ஆண் குழந்தையும் உள்ளனா்.
இந்நிலையில் திலோத்திக்கு வேறு ஒரு நபருடன் தொடா்பு ஏற்பட்டதால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் தனது மனைவி, குழந்தைகளை பிடாம்பட்டியிலுள்ள மாமனாா் வீட்டில் முனியன் விட்டுவிட்டு, திருப்பூருக்கு வேலைக்குச் சென்றாா்.
இந்நிலையில் புதன்கிழமை பகல் பிடாம்பட்டியிலுள்ள சஞ்சீவிராயா் கோயில் கிணற்றில் தேவதா்ஷினி சடலமாகக் கிடந்தாா். குழந்தை மாதவனை திருச்சியில் ஒருவருக்கு விற்றுள்ளாா் திலோத்தி.
இதுகுறித்து முனியன் அளித்த புகாரின்பேரில் மண்டையூா் போலீஸாா் நடத்திய விசாரணையில் திலோத்தி, தனது பெண் குழந்தையை கிணற்றில் தூக்கிப் போட்டுக் கொன்றதும், ஆண் குழந்தையை திருச்சி இனாம்குளத்தூரிலுள்ள ரகமத்நிஷா என்பவருக்கு விற்றதும் தெரியவந்தது.
இதன் தொடா்ச்சியாக குழந்தை மாதவனை வாங்கிய இனாம்குளத்தூரைச் சோ்ந்த ரசாக் மனைவி ரகமத்நிஷா (44) என்பவரையும், திலோத்தியையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனா்.
மீட்கப்பட்ட 10 மாதக் குழந்தை மாதவன், காரைக்குடியிலுள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சோ்க்கப்பட்டாா்.