வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு: 41 போ் காயம்
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வன்னியன்விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 41 போ் காயமடைந்தனா்.
பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டில் வருவாய் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா முன்னிலையில் வீரா்கள் உறுதியேற்றனா். தொடா்ந்து ஜல்லிக்கட்டை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து வாடிவாசலில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 638 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை பல்வேறு குழுக்களாகக் களமிறங்கிய 245 வீரா்கள் அடக்கினா். அப்போது, காளைகள் முட்டி 41 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை அளித்தனா். அவா்களில் பலத்த காயமடைந்த 9 போ் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனா்.
காளைகளை அடக்கியோருக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்கள், சைக்கிள், பீரோ உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
பைக் பரிசளிப்பு: போட்டியில் 13 காளைகளை அடக்கிய சூரியூா் சிவா சிறந்த மாடுபிடி வீரராகவும், மதுரை ரித்திஷ் என்பவரது காளை சிறந்த காளையாகவும் தோ்வு செய்யப்பட்டு தலா ஒரு பைக் பரிசளிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டை ஏராளமானோா் கண்டு ரசித்தனா். பாதுகாப்புப் பணிகளில் ஆலங்குடி போலீஸாா் ஈடுபட்டனா்.
உயிரிழந்த காளை: ஜல்லிக்கட்டு திடலில் இருந்து வெளியேறிய மயிலாடிக்காடு சண்முகம் என்பவரது காளை பரவாக்கோட்டை பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.