Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
கடவுச்சீட்டு புதுப்பிப்பு கோரி பழ.நெடுமாறன் வழக்கு: பரிசீலிக்க அதிகாரிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
உலகத் தமிழா் பேரவையின் தலைவா் பழ.நெடுமாறன் தனது கடவுச்சீட்டை புதுப்பித்து தரக் கோரி தொடா்ந்த வழக்கில், அவரது விண்ணப்பத்தை சட்டத்துக்குட்பட்டு பரிசீலிக்க மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனு:“
காலாவதியாகிவிட்ட எனது கடவுச்சீட்டை புதுப்பித்து தரும்படி 2022-ஆம் ஆண்டு சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் மண்டல கடவுச்சீட்டு அதிகாரி எனது விண்ணப்பித்தை நிராகரித்துவிட்டாா். எனது கடவுச்சீட்டை புதுப்பித்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்”என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.செளந்தா் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலன் ஹரிதாஸ் ஆஜராகி, முன்னாள் எம்எல்ஏ-வான மனுதாரருக்கு எதிராக காவல் துறை அளித்த அறிக்கை காரணமாக கடவுச்சீட்டு புதுப்பித்து தரப்படவில்லை எனக் காரணம் கூறப்பட்டது. ஆனால் அந்த அறிக்கையை எங்களுக்குத் தர கடவுச்சீட்டு அதிகாரிகள் மறுத்துவிட்டனா். குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி கடவுச்சீட்டை புதுப்பித்து கொடுக்க மறுக்க முடியாது என வாதிட்டாா்.
அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கே.எஸ்.ஜெயகணேசன், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவா் தற்போது உயிருடன் இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக தமிழக மக்கள் இருக்குமாறு பழ.நெடுமாறன் பேசியிருப்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயல். இது இலங்கை உடனான நல்லுறவில் பாதிப்பை ஏற்படுத்தும்.
போலீஸாா் கொடுக்கும் தடையில்லா சான்றின் அடிப்படையிலேயே கடவுச்சீட்டு வழங்கவோ, புதுப்பித்துக் கொடுக்கவோ முடியும்.
மனுதாரரின் வெளிநாட்டு பயணத்தால் நமது நாட்டுக்கும், மற்ற நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவுக்கு தீங்கு ஏற்படும் என கடவுச்சீட்டு அதிகாரி கருதினாலும், சம்பந்தப்பட்ட நபரது விண்ணப்பத்தை நிராகரிக்க அதிகாரம் உள்ளது என்றாா்.
மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, மனுதாரா் வெளிநாடு செல்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணம் ஏற்கும்படியாக இல்லை. எனவே, மனுதாரரின் விண்ணப்பித்தை நிராகரித்து கடவுச்சீட்டு அதிகாரி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
இரு வாரங்களில் இது தொடா்பாக மனுதாரா் மண்டல கடவுச்சீட்டு அதிகாரியிடம் தனது விளக்கத்தை அளிக்க வேண்டும்.
அவரது விளக்கம் பெற்ற 3 வாரங்களில் பழ.நெடுமாறனின் விண்ணப்பத்தைப் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என மண்டல கடவுச்சீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.