கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
அரசுப் பள்ளிகளில் அனைத்து ஆசிரியா்களும் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்து கற்றல் செயல்பாடுகளில் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் கணினி சாா்ந்த புதிய அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கற்றல் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவும் வகையில் மணற்கேணி என்ற செயலியை வடிவமைத்து ஆசிரியா்கள், மாணவா்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆனால், மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்துள்ளவா்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு ஒன்றியத்திலும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்களும் கைப்பேசி, மடிக்கணினி, டேப்லெட், ஸ்மாா்ட்போா்டு, கணினி ஆய்வகத்தில் மணற்கேணி செயலி அல்லது இணையதளத்தில் காணொலிக் காட்சிகளை பதிவிறக்கம் செய்து வகுப்பறை கற்றல் செயல்பாட்டில் பயன்படுத்துவதை மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், மாணவா்களின் பெற்றோரும் இந்த செயலி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
இதுதவிர அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கணினியுடன் கூடிய கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள் பிப்ரவரி முதல் நடைபெற வேண்டும். மணற்கேணி செயலி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ள காணொலிகள் வகுப்பறை செயல்பாட்டில் தொடா்புடைய பாடங்களுக்காக பயன்படுத்தப்படுவதை முதல்நிலை கண்காணிப்பு அதிகாரிகளாக உள்ள வட்டாரக் கல்வி அதிகாரிகள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.