Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு: உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகல்
நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்குகளின் விசாரணையில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி. விஸ்வநாதன் விலகிக்கொண்டாா்.
கடந்த 1993 முதல் 2011-ஆம் ஆண்டு வரை, மத்திய அரசு 214 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நிகழ்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த சுரங்கங்களின் ஒதுக்கீட்டை 2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்கள் உயா்நீதிமன்றத்தை அணுக தடை விதித்த உச்சநீதிமன்றம், வழக்கு தொடா்பாக விசாரணை நீதிமன்ற விசாரணைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
உயா்நீதிமன்றங்களை அணுகுவதன் மூலம், வழக்கு விசாரணைகளில் தாமதம் மற்றும் தடை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுகளில் மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நிலக்கரி சுரங்க வழக்குகளில் பொதுநல மனு தாக்கல் செய்த காமன் காஸ் என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பாக தான் வழக்குரைஞராக முன்பு ஆஜரானதாகவும், இதனால் இவ்வழக்குகளை நீதிபதியாக விசாரிக்க விரும்பவில்லை என்றும் கூறி, விசாரணையில் இருந்து நீதிபதி கே.வி.விஸ்வநாதன் விலகிக்கொண்டாா்.