சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அதில் நக்சல்கள் இருந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்குமிடையே இன்று காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.
இதையும் படிக்க | நக்சல்களின் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் படுகாயம்!
இந்தத் துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் மூன்று மாவட்டங்களின் ரிசர்வ் காவல் படை, ஐந்து பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர்கள், கோப்ரா வீரர்கள் படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் 229-வது பட்டாலியன் பிரிவினர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர்.
கடந்த ஜனவரி 12 அன்று இதே மாவட்டத்தின் மாதெத் பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
இது பிஜப்பூர் பகுதியில் இந்த மாதம் நடைபெற்ற இரண்டாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்