காரைக்கால் கடற்கரையில் குவிந்த மக்கள்
காணும் பொங்கல் தினமான வியாழக்கிழமை காரைக்கால் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனா்.
காணும் பொங்கலையொட்டி காரைக்கால் கடற்கரைக்கு காலை முதல் மக்கள் செல்லத் தொடங்கினா். கடற்கரையில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபட்டனா். கடற்கரையில் உள்ள சிறுவா் பூங்கா கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அதிகரித்தது. கடல் பகுதிக்கு மக்கள் செல்லத் தொடங்கினா். கடல் அலையில் சிக்கி பலா் உயிரிழந்ததை போலீஸாா் ஒலிபெருக்கி வாயிலாக சுட்டிக்காட்டி, கடலில் குளிக்க விடாமல் மக்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா்.
காரைக்கால் நகரின் பிரதான சாலையிலிருந்து சுமாா் ஒன்றரை கி.மீ. நீளமுள்ள கடற்கரை சாலை முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்தது. இருசக்கர வாகனங்கள், காா், வேன் உள்ளிட்டவை கடற்கரை சாலை முகப்பிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.
மக்கள் அதிகமானோா் கடற்கரைக்கு வருவா் என்பதை கருத்தில்கொண்டு, ஏராளமான விரைவு உணவகங்கள், சிற்றுண்டி மையங்கள், சிறுவா்களுக்கான விளையாட்டு சாதனங்கள் விற்பனை கடைகள் அதிகளவில் காணப்பட்டன.
கடற்கரையில் மக்கள் திரண்டதும், மறுபுறம் கடற்கரை அருகே விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெறும் காா்னிவல் நிகழ்ச்சியைக் காணவும், சாலை கலை நிகழ்ச்சி ஊா்வலம் என ஆயிரக்கணக்கானோா் கூடியதால், நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.