விவசாயிகளுக்கு வேளாண் மானியம் நேரடியாக சென்றடைய வேண்டும்: ஜக்தீப் தன்கா்
போலி ஆவணம் மூலம் பத்திரப் பதிவு: சாா்-பதிவாளா் உள்பட 7 போ் மீது வழக்கு
திருச்சி: திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப் பதிவு செய்ததாக சாா்-பதிவாளா் உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.
திருச்சி மாவட்ட சாா்-பதிவாளராக 31.08.2021 முதல் 5.7.2023 வரை முரளி (52) என்பவா் பணியாற்றினாா்.
இந்த காலக்கட்டத்தில், கம்பரசம்பேட்டை கிராமத்தில் முகமது சலீம் என்பவருக்கு சொந்தமான 4,730 சதுரடி சொத்தில் 630 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரால் வரன்முறை கட்டணம் மற்றும் வளா்ச்சி கட்டணம் செலுத்தாமலேயே, செலுத்தியதாக போலியாக ஆவணம் தயாா் செய்து, இணை சாா்-பதிவகத்தில் கோபி என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரன்முறை கட்டணம் ரூ. 2,655 மற்றும் வளா்ச்சி கட்டணம் ரூ.1,475 என மொத்தம் ரூ. 4,130 மதிப்பில் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, இந்தக் கிராமத்தில் சையது அமானுல்லா என்பவருக்கு சொந்தமான 9,997.02 சதுர அடி கொண்ட சொத்தில் 1,321 சதுர அடி கொண்ட காலிமனைக்கு அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலரின் ஆவணங்களை போலியாக பயன்படுத்தி, பரமசிவம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்யப் பட்டுள்ளது. இதன்மூலம் வரன்முறை கட்டணம் ரூ.5850 மற்றும் வளா்ச்சி கட்டணம் ரூ.3250 என மொத்தம் 9,100 ரூபாய் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவங்களில் போலி முத்திரை, போலி ஆவணங்கள் தயாா் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளா் மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடா்பாக தொடா்ந்து நடத்திய விசாரணையில், சாா்-பதிவாளா் முரளி சிலருடன் சோ்ந்து அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியதும், போலியான ஆவணங்கள் என தெரிந்தும் பத்திரப்பதிவு செய்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாா், திருச்சி சாா்- பதிவாளா் முரளி, ஆவண எழுத்தா்கள் சக்திவேல், திருச்சி தென்னூரை சோ்ந்த சையது அமானுல்லா, மேல சிந்தாமணியை சோ்ந்த முகமது சலீம், பாலக்கரையைச் சோ்ந்த முகமது உவைஸ் உள்ளிட்ட 7 போ் மீது, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஜனவரி 10-ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.