செங்கத்தில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
செங்கத்தில் துக்காப்பேட்டை முதல் போளூா் வெளிவட்டச் சாலை வரை ஒரே சாலைதான் உள்ளது. மாற்றுச்சாலைகள் கிடையாது. துக்காப்பேட்டை புதிய பேருந்து நிலையம் முதல் போளூா் வெளிவட்டச் சாலை வரை கடையின் உரிமையாளா்கள் சுமாா் 5 அடி தொலைவுக்கு சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளனா்.
மேலும், காய், கனி கடைகள் மற்றும் வெங்காய வியாபாரிகள் சாலையோரம் மூன்று சக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனா். இதனால், சாலையில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகர மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
நகர பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, நெடுஞ்சாலைத் துறைக்கு புகாா் மனுக்கள் அனுப்பப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் நகரின் பல்வேறு இடங்களில் வாகனப் போக்குவரத்து அதிகரித்து அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. செங்கம் - போளூா் சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதனால், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
இதனால், செங்கம் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்
என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.