கும்பமேளா கருத்தரங்கிலிருந்து விலகிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ்!
விஎச்பி மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் யாதவ், கும்பமேளா கருத்தரங்கு நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த டிசம்பர் மாதம் வலதுசாரி அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) சட்டப்பிரிவு அமைப்பின் மாநாட்டில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் பங்கேற்றுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரும்பான்மையினரின் (இந்துக்களின்) விருப்பப்படியே இந்த நாடு செயல்படும் என்று கூறினார்.
இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்ததைத்தொடர்ந்து உச்சநீதிமன்ற கொலீஜியம், நீதிபதி சேகர் யாதவை அழைத்து எச்சரிக்கை விடுத்து அனுப்பியது.
இதையும் படிக்க | இந்தியா கூட்டணியில் இணைய விஜய்க்கு அழைப்பு!
இதன் தொடர்ச்சியாக பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் ஜன. 22 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் நீதிபதி யாதவ் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்றதை கொண்டாடும்விதமாக கும்பமேளா விழாவில் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த கருத்தரங்கில் இருந்து நீதிபதி சேகர் யாதவ் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜன. 22 ஆம் தேதி நீதிமன்ற வேலை நாள் என்பதால், தான் விழாவில் கலந்துகொள்ள முடியாது என்று நீதிபதி யாதவ் கூறியதாக கும்ப மேளா விழா ஏற்பாட்டாளர்கள் கூறினர்.