போர் நிறுத்த ஒப்பந்தம்: இஸ்ரேல் விடுவிக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு!
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே முதல்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி விடுவிக்கப்பட இருக்கும் 735 பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்கட்ட போர் நிறுத்தம் நாளை (ஜன. 19) முதல் 42 நாளுக்கு செயல்பாட்டுக்கு வரவுள்ளது. இதில், காஸாவில் இருந்து பணயக்கைதிகளாக பிடித்து வரப்பட்ட மக்கள் 1,167 பேரை இஸ்ரேல் விடுவிக்க உள்ளதாகவும், ஹமாஸ் பிடித்து வைத்துள்ள இஸ்ரேலின் 33 பணயக் கைதிகளை விடுவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் பட்டியலில் உள்ள பல கைதிகள் கொலைக் குற்றவாளிகள் என்று கூறப்படும் நிலையில், 12 இஸ்ரேலியர்களைக் கொன்றதற்காக 13 ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த அகமது பர்கௌதி, 2003 ஆம் ஆண்டு ஜெருசலேமில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பில் 23 பேர் கொல்லப்பட்டதற்காக 23 ஆயுள் தண்டனையும் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மஜ்தி ஜாதாரி ஆகியோர் இந்தப் பட்டியலில் அடங்குவர் என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிக்க | போர் நிறுத்த ஒப்பந்த விதிமீறல்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஹிஸ்புல்லா!
மேலும், 2001 ஆம் ஆண்டு ஹைஃபாவில் பேருந்தில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதற்காக 16 ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த மூத்த ஹமாஸ் உறுப்பினர் சலீம் ஹஜ்ஜா, 13 இஸ்ரேலியர்களைக் கொன்றதற்காக 13 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தான்சிம் அமைப்பின் மூத்த உறுப்பினர் முகமது நைஃபா ஆகியோரும் விடுவிக்கப்பட உள்ளனர்.
இந்தப் பட்டியலில் அல்-அக்ஸா தியாகிகள் அமைப்பின் தளபதி சகாரியா சுபைதியும் விடுவிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய குடிமக்கள், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் குறிப்பிட்ட சில கைதிகளின் விடுதலையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கம் ஒப்புதல் அளித்ததாக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஆதரவாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை வாக்களித்ததைத் தொடர்ந்து நேற்று (ஜன. 17) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 24 அமைச்சர்கள் பணயக்கைதிகள் விடுவிப்புக்கு ஆதரவாகவும், 8 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
இதையும் படிக்க | காஸாவில் போா் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்
ஹமாஸ் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவித்து ஒப்பந்தத்தின் முதல் கட்டம் முடிந்ததும் காஸாவில் போரை மீண்டும் தொடங்க இஸ்ரேல் அரசு உறுதியளிக்க வேண்டும் என இத்தாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மாட்ரிச் ஆகிய இரு தீவிர வலதுசாரி அமைச்சர்கள் கோரிக்கை வைத்து போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒப்பந்தத்தின் முதல் கட்டமாக காஸாவில் பிடித்து வைக்கப்பட்ட மூன்று இஸ்ரேலியப் பெண்களும், இஸ்ரேலில் உள்ள 95 பாலஸ்தீன கைதிகளும் நாளை (ஜன. 19) விடுவிக்கப்பட உள்ளனர்.
இதையும் படிக்க | ஈரான் உச்ச நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் சுட்டுக்கொலை!
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முழு விதிமுறைகளுக்கும் தங்களின் உறுதிப்பாட்டை அறிவித்த ஹமாஸ் அமைப்பினர் சர்ச்சைகள் தீர்க்கப்பட்டதாக நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் இஸ்ரேலுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுத விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என்று டிரம்ப் உறுதியளித்ததாகவும், ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறும் பட்சத்தில் மீண்டும் போர் நடத்த இஸ்ரேலுக்கு டிரம்ப் முழு ஆதரவையும் வழங்குவார் என்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.