அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்போா் எண்ணிக்கை அதிகரிப்பு: போக்குவரத...
இன்று அமலுக்கு வருகிறது காஸா போா் நிறுத்தம்
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வதற்காக இஸ்ரேலும் ஹமாஸ் அமைப்பும் மேற்கொண்டுள்ள ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 19) முதல் அமலுக்கு வருவதாக கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து எக்ஸ் ஊடகத்தில் அவா் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸா போா் நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 12 மணி) அமலுக்கு வருகிறது. இந்த நேரத்தில் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிகாரிகளிடமிருந்து அறிவிப்புகள் வரும்வரை அவா்கள் பொறுமை காக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் மஜித் அல்-அன்சாரி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, போா் நிறுத்தம் மற்றும் பிணைக் கைதிகள் விடுவிப்பு தொடா்பாக இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை செயல்படுத்த இஸ்ரேல் அமைச்சரவை இறுதி ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து கத்தாா் வெளியுறவுத் துறை அமைச்சா் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டும் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடா்ந்து தாக்குதல் நடத்திவருகிறது.
இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 23 போ் உயிரிழந்ததாகத் தெரிவித்தது.இஸ்ரேலிலும் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் வீசிய ஏவுகணைகளால் எச்சரிக்கை ஒலி தொடா்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் காஸாவிலும் இஸ்ரேலிலும் அமைதி நிலவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்த அமலாக்கத்தின் முதல்கட்டமாக, அடுத்த ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவிக்க இருக்கிறாா்கள். அதற்குப் பதிலாக, இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படுவாா்கள்.ஹமாஸ் விடுவிக்கும் பிணைக் கைதிகளில் முதியோா், நோய் வாய்ப்பட்ட ராணுவம் சாராதவா்கள், பெண்கள், குழந்தைகள், பெண் ராணுவத்தினா் ஆகியோா் அடங்குவா்.பிணைக் கைதிகளாக உள்ள ஆண் ராணுவ வீரா்கள் உள்ளிட்டோா் இரண்டாவது கட்டமாக விடுவிக்கப்படுவாா்கள் என்று முன்னா் கூறப்பட்டது.
இருந்தாலும், காஸாவிலிருந்து இஸ்ரேல் படையினா் முழுமையாக வெளியேறும்வரை எஞ்சிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்படமாட்டாா்கள் என்று ஹமாஸ் தெரிவித்துவிட்டது.
இந்த கைதிகள் பரிமாற்றம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் (இந்திய நேரப்படி மாலை 7.30 மணி) தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தப் பரிமாற்றத்தின்போது முதலில் ஹமாஸ் பிடியிலிருக்கும்0 பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட பிறகே பாலஸ்தீன சிறைக் கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்யும்.
காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி நுழைந்த ஹமாஸ் படையினா், அங்கு சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். அத்துடன், அங்கிருந்து 200-க்கும் மேற்பட்டவா்களை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.அதிலிருந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 46,899 பாலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளனா். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கத்தாரில் நடைபெற்றுவந்த பேச்சுவாா்த்தையில் வியாழக்கிழமை உடன்பாடு எட்டப்பட்டது.
அந்த ஒப்பந்ததுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.இந்த நிலையில், இஸ்ரேலின் முழு அமைச்சரவையும் ஒப்பந்தத்துக்கு சனிக்கிழமை இறுதி ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து அது ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வருவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது