கேபிடல் கலவரத்தில் கைதான 1,500 பேருக்கு டிரம்ப் பொதுமன்னிப்பு!
யுஜிசி புதிய விதிகள்: கேரள சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக தமிழகத்தைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவையிலும் இன்று(செவ்வாய்க்கிழமை) முன்மொழியப்பட்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதில் ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும்வகையில் யுஜிசி வெளியிட்ட புதிய விதிமுறைகளுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
யுஜிசியின் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஜன. 9 அன்று சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று(ஜன. 20) கடிதம் எழுதினார். தொடர்ந்து நாட்டில் பாஜக அல்லாத ஆளும் மாநில முதல்வர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார்.
அவர் எழுதிய கடிதத்தில், தில்லி, ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், தெலங்கானா சட்டப்பேரவைகளிலும் யுஜிசியின் புதிய வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையும் படிக்க | யுஜிசி புதிய விதிகள்: 9 மாநில முதல்வர்களுக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்!
இந்நிலையில், யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் இன்று(ஜன. 21) தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 6 ஆம் தேதி யுஜிசி வெளியிட்ட வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை வெளியிடுமாறு மத்திய அரசிடம் கோரும் தீர்மானத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று முன்மொழிந்தார்.
பல மாநில அரசுகள், கல்வி நிபுணர்களின் கருத்துகளுக்கு ஏற்ப கேரள சட்டப்பேரவையில் இந்த தீர்மானம் முன்மொழியப்படுவதாகவும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டப்பேரவைகளால் இயற்றப்பட்ட சட்டங்களின்படியே செயல்படுவதாகவும் முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
மேலும் யுஜிசியின் புதிய விதிமுறைகள் மாநில அரசின் உரிமையைப் பறிக்கும்வகையில் உள்ளதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து பேரவையில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக்கோரி முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் டாக்டர் ஆர். பிந்து இதுகுறித்து, 'கேரள சட்டப்பேரவையில் யுஜிசியின் விதிகளுக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் மாநில அரசுகளின் உரிமைகள் மீதான தாக்குதலாகவே இதனை நாங்கள் கருதுகிறோம். பல்கலைக்கழகங்கள், கல்வியாளர்கள் என கல்வித் துறை மேம்பாட்டிற்காக க்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள பணம் செலவிடுகிறது. ஆனால் யுஜிசியின் புதிய வரைவு வழிகாட்டுதல்கள், மாநில அரசிடம் இருந்த உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. எனவே, இதை எதிர்ப்பது நமது கடமை' என்றார்.
யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெறக்கோரி மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு முதல்வர் பினராயி விஜயனும் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.