அமெரிக்க துணை அதிபர் எனக்கு பேரன் முறை உறவு.. ஆந்திர பெண்மணி நெகிழ்ச்சி!
விசாகப்பட்டினம் : அமெரிக்காவின் 50-ஆவது துணை அதிபராக ஜே. டி. வான்ஸ் திங்கள்கிழமை(ஜன. 20) பதவியேற்றுக் கொண்டார்.
ஜே. டி. வான்ஸின் மனைவி உஷா சிலுகுரி ஆந்திர பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்டவர். அவரின் உறவினர்கள் பலர் ஆந்திர பிரதேசத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்றிரவு அமெரிக்க துணை அதிபராக ஜே. டி. வான்ஸ் பதவியேற்றதும், உஷா வான்சின் உறவினர்கள் அதனைக் கொண்டாடி மகிழ்ந்ததைக் காண முடிந்தது.
உஷா சிலுகுரியின் குடும்பத்தார் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள சாய்புரம் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்களாவர். பாரம்பரியமாக கல்வியில் சிறந்து விளங்கி வரும் இக்குடும்பத்தின் வாரிசான உஷாவின் தாத்தா ராம சாஸ்திரி சென்னை ஐஐடியில் பேராசிரியராக இருந்தவர்.
இவரது மகனான ராதாகிருஷ்ணா உஷா வான்சின் தந்தையாவார். அவரும் அமெரிக்காவிலுள்ள சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ளார். அவருடைய மனைவி லக்ஷ்மி(உஷாவின் தாயார்) அதே மாவட்டத்திலுள்ள பாமர்ரு கிராமத்தை சேர்ந்தவாராவர்.
இந்த நிலையில், உஷா சிலுகுரியின் பாட்டி அளித்துள்ள பேட்டியொன்றில், இனி இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவு மேம்படுமென்று குறிப்பிட்டுள்ளார். உஷா சிலுகுரியின் பாட்டியான விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலுகுரி சாந்தம்மாவுக்கோ 96 வயது கடந்துவிட்டது. இவரை முதுமை ஆட்கொண்டிருந்தாலும், இன்றும் விழியநகரத்திலுள்ள செஞ்சூரியன் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை கௌரவ விரிவுரையாளராக இருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது:
“ஜே. டி. வான்சுக்கும் உஷாவுக்கும் வாழ்த்துகள்! இரு பெரும் நாடுகளுக்குமான இணைப்பு மற்றும் ஒன்றிணைப்புக்கானதொரு பாலமாக இந்த தருணம் இருக்குமென பார்க்கிறேன். இந்த தம்பதி இந்தியாவின் சில பிரச்னைகளுக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள் என நான் நம்புகிறேன்.
உங்கள் நாட்டையும் அதேபோல எம் தேசத்தையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இது சிலிகுரி குடும்பத்துக்கொரு பெருமைமிகு தருணம்”.
“நம் தேசத்தின் கௌரவத்தை மேலும் உயர்த்தும் பொறுப்பு இப்போது உஷாவுக்கு வந்துள்ளது. உஷாவின் தாத்தா, அதாவது என்னுடைய கணவர் சுப்பிரமணிய சாஸ்திரியும், அவருடைய அண்ணன் ராம சாஸ்திரியும் பல்கலைக்கழக பேராசிரியர்களாவர். சமூகம் மீதான அக்கறையை ஆழமாகக் கொண்டதொரு குடும்பம் எங்களது. சொல்லப்போனால்.. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் என் கணவர் இரண்டாண்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்படியிருக்கையில், எங்கள் குடும்பத்தினரிடமுள்ள அதே புத்திக்கூர்மை உஷாவிடமும் நிச்சயமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.