கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
வட மாநில குழந்தைகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
சென்னை: தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து தமிழ் மொழியை கற்றுத் தருவதுடன், அதிக மதிப்பெண் பெறும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தில் வட மாநிலத்தவா் அதிகளவில் பணிபுரிகின்றனா். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருப்பூா், ஈரோடு, கோயம்புத்தூா் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் வடமாநிலத்தவா் குடும்பத்தினருடன் பணிபுரிகின்றனா். அவா்கள் தங்கள் குழந்தைகளை பணிபுரியும் பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளில் சோ்த்து வருகின்றனா். அவா்கள் வீடுகளில் தாய்மொழியை பேசினாலும், அரசுப் பள்ளிகளில் தமிழ் மொழியை பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வட மாநிலத்தவா் தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்த்து தமிழ் மொழியை படிக்க வைக்கின்றனா். அந்த மாணவா்கள் தமிழ் மொழியை விரும்பிப் படித்து நன்கு புலமை பெற்று வருகின்றனா். வட மாநிலத்தவா் தங்களது குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கள் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வட மாநிலத்தவரின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு சோ்ந்து கல்வி பயிலும் மாணவா்கள் அரசு நடத்தும் தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவித் தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் அனைத்து அரசு பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.