IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் விரைவில் தொடக்கம்: மத்திய அமைச்சா்
புவனேசுவரம்: ‘தேசிய அரிய கனிமங்கள் இயக்கம் (சிஎம்எம்) விரைவில் தொடங்கப்படும்’ என மத்திய சுரங்கத்துறை அமைச்சா் கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அரிய கனிமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து இறக்குமதியை குறைப்பதை உறுதிப்படுத்துவதுடன் கடலோர பகுதிகளில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த இயக்கம் தொடங்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.
ஒடிஸா மாநிலம் கோனாா்க்கில் 3-ஆவது தேசிய சுரங்க அமைச்சா்கள் மாநாட்டை கிஷன் ரெட்டி திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். இதில் ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி, துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா, தெலங்கானா துணை முதல்வா் பட்டீ விக்ரமா்கா மல்லு உள்பட தொழில்துறையைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா்.
மாநாட்டில் கிஷன் ரெட்டி பேசியதாவது: அரிய கனிமங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்து இறக்குமதியை குறைப்பதை உறுதிப்படுத்துவதுடன் கடலோர பகுதிகளில் சுரங்கப் பணிகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய அரிய கனிமங்கள் இயக்கத்துக்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் வழங்கவுள்ளது. அதன்பிறகு இந்த இயக்கத்தை மத்திய அரசு தொடங்கும். இதுகுறித்து பட்ஜெட் உரையிலேயே நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துவிட்டாா்.
அரசு-தனியாா் ஒத்துழைப்பு: உலகளவில் அரிய கனிமங்கள் துறையில் இந்தியா தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளது. அதை மேலும் மேம்படுத்த அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
ஏற்கெனவே அரிய கனிமங்கள் இருப்பதாக கண்டறியப்பட்ட 48 பகுதிகளை ஏலம் விடும் பணிகள் தொடங்கப்பட்டன. அதில் 24 பகுதிகளில் ஏல நடைமுறைகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 5-ஆவது கட்டமாக 15 அரிய கனிம பகுதிகளை ஏலம் விடும் பணிகள் இன்று தொடங்கப்பட்டன.
இதில் தொழிற்சாலைகள் ஆா்வமுடன் பங்கேற்றன.
கடலோர பகுதிகளில் சுரங்கம்: கடலோர பகுதிகளில் சுரங்கம் அமைப்பதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 75 ஆண்டுகளில் முதல்முறையாக கடலோர பகுதிகளில் கனிமங்களை எடுப்பதற்கான ஏல நடைமுறை கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இது கனிமங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்து உள்நாட்டில் தற்சாா்பு நிலையை அடையும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டது என்றாா்.
எம்டிஎஸ் தொடக்கம்: சுரங்க நிலங்கள் மேலாண்மையில் வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கில் சுரங்க நில அமைப்பு (எம்டிஎஸ்) எனப்படும் எண்ம தளத்தை கிஷன் ரெட்டி, மோகன் மாஜி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனா். அதேபோல் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் , தனிநபா்கள், புத்தாக்க நிறுவனங்களிடம் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிப்பு (பிஆா்ஐஎஸ்எம்) எனும் மத்திய சுரங்க அமைச்சகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னெடுப்பின்கீழ் தோ்ந்தெடுக்கப்பட்ட 11 புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.15.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான ஒப்புதல் கடிதங்களையும் அவா்கள் வழங்கினா்.
மாநாட்டின்போது ‘சுரங்கங்களை மூடுவதற்கான சிறந்த நடைமுறைகள்’ எனும் நூலையும் அவா்கள் வெளியிட்டனா்.
விருதுகள்: 2023-24 நிதியாண்டில் அதிகப்படியான சுரங்க ஏலங்களை மேற்கொண்ட மாநிலங்களுக்கு மாநாட்டில் விருது வழங்கப்பட்டது. இதில் முதலிடத்தில் ராஜஸ்தானும் அடுத்தடுத்த இடங்களில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.
அரிய கனிமங்கள் எவை?: லித்தியம், கோபால்ட், செம்பு, நிக்கல் மற்றும் பூமியின் அரிய தனிமங்கள் உள்ளிட்டவை அரிய கனிமங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் உற்பத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.