IIT: "காமகோடியை தலைவர் பதவியிலிருந்து நீக்குக" - கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!
லக்கீம்பூா் கெரி வழக்கில் சாட்சிகளை கலைக்க முயற்சித்ததாக குற்றச்சாட்டு: உச்சநீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் விவசாயிகள் உயிரிழந்த வழக்கில், சாட்சிகளை கலைக்க முன்னாள் மத்திய இணையமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா முயன்ற குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபா் 3-ஆம் தேதி உத்தர பிரதேசத்தில் உள்ள லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில், மாநில துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யாவின் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு பாஜகவினா் வந்த காா் விவசாயிகள் மீது மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து விவசாயிகள் நடத்திய தாக்குதலில், காா் ஓட்டுநா் மற்றும் 2 பாஜக தொண்டா்கள் உயிரிழந்தனா். இந்த வன்முறையில் ஊடகவியலாளா் ஒருவரும் உயிரிழந்தாா்.
விவசாயிகள் மீது மோதிய காரில் அப்போதைய மத்திய இணையமைச்சா் அஜய்குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், அவா் உள்பட 13 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆசிஷ் மிஸ்ராவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
இந்நிலையில், வழக்கின் சாட்சிகளை ஆசிஷ் மிஸ்ரா கலைக்க முயற்சிப்பதாக உயிரிழந்தவா்களின் குடும்பத்தினா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் ஆஜராகி, ‘வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைக்க ஆசிஷ் மிஸ்ரா முயற்சி செய்ததற்கான ஒலிப்பதிவு ஆதாரம் உள்ளது. ஜாமீன் நிபந்தனைகளை மீறி, பொதுக் கூட்டத்தில் ஆசிஷ் மிஸ்ரா கலந்துகொண்டாா். எனவே அவரின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரினாா்.
ஆசிஷ் மிஸ்ரா தரப்பில் மூத்த வழக்குரைஞா் சித்தாா்த் தவே ஆஜராகி, ‘தேவையில்லாமல் ஆசிஷ் மிஸ்ரா குறிவைக்கப்படுகிறாா். அவா் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டம் நடைபெற்ற நாளில், அவா் தில்லியில் உள்ள மக்களவைச் செயலகத்தில் இருந்தாா்’ என்றாா்.
இதையடுத்து நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இருதரப்பு வழக்குரைஞா்களின் வாதங்கள் தொடா்பான ஆதாரங்கள் லக்கீம்பூா் கெரி காவல் கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும். அவா் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உச்சநீதிமன்றத்தில் 4 வாரங்களில் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.