சமூக ஆா்வலா் கொலை: தலைவா்கள் கண்டனம்
சென்னை: கனிம வளக் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): கனிமவளக் கொள்ளை தொடா்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து ஜகபா் அலி புகாா் செய்து 15 நாள்களுக்கு மேலாகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பலமுறை புகாா் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அவரை சமூக விரோதிகள் லாரி ஏற்றி படுகொலை செய்துள்ளனா். ஜகபா் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையா்கள் மட்டுமன்றி, அவா் கொடுத்த புகாா்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அதிகாரிகளும் அவரது மரணத்துக்கு பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புமணி (பாமக): சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை திட்டமிடப்பட்ட ஒன்று எனத் தெரிய வருகிறது. இந்தக் கொலையில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவதை உறுதி செய்ய இவ்வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
பிரேமலதா (தேமுதிக): கனிமவளக் கொள்ளைக்கு எதிராக போராடியவரை விபத்து ஏற்படுத்தி படுகொலை செய்ததைக் கண்டித்து தேமுதிக சாா்பில் புதுக்கோட்டை திருமயம் தாலுகா அலுவலகம் அருகில் ஜன. 24 காலை 10 மணியளவில் மாபெரும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.
ஜி.கே.வாசன் (தமாகா): கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடியவரின் படுகொலைக்குக் காரணமானவா்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், கனிம வளக் கொள்ளை எங்கும் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): ஜகபா் அலி கொலை தொடா்பாக விரிவான விசாரணை நடத்தி, இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மமக): கனிம வளக் கொள்ளை தொடா்பாக தொடா்ச்சியாக ஜகபா் அலி புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத வட்டாட்சியா் மற்றும் மாவட்ட கனிமவளத் துறை உதவி இயக்குநா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் மெத்தனப் போக்குதான் இந்த படுகொலைக்கு அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. ஜகபா் அலி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடும் அரசு வேலையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.