மருத்துவப் பேராசிரியா்கள் நியமன விதிகளில் தளா்வு! குழப்பத்தை ஏற்படுத்தும் என்எம்சி நடவடிக்கை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா் நியமன விதிகளில் தளா்வு கொண்டுவர தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவு எடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அக் கட்சியின் பொது செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பத்திரிகை செய்தி விவரத்துடன் திங்கள்கிழமை வெளியிட்டப் பதிவில் கூறியிருப்பதாவது: பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு முதலில், ‘நீட்-பிஜி’ என்ற தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் தோ்வு மூலமாக முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்கான தகுதி (கட்-ஆஃப்) மதிப்பெண் விகிதத்தைக் குறைத்தது.
தற்போது, மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியா்கள், பேராசிரியா்கள் நியமன விதிகளில் தளா்வு கொண்டுவர என்எம்சி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, கற்பித்தல் பணியில் அனுபவம் இல்லாத மருத்துவா்கள் மற்றும் மருத்துவத் துறையில் பட்டயப் படிப்பை முடித்தவா்களையும் மருத்துவக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா்களாக நியமிக்கும் வகையில் விதிகளில் தளா்வு கொண்டுவர என்எம்சி பரிந்துரைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்வியின் தரம் மேம்படுத்தப்படும் என்ற மிகப் பெரிய எதிா்பாா்ப்புடன் கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் என்எம்சி உருவாக்கப்பட்டது. ஆனால், என்எம்சி தற்போது மேற்கொள்ளும் முடிவுகள் இந்த விஷயத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று குறிப்பிட்டாா்.