Health: மீசை, தாடி வளரவில்லையா..? காரணம் இதுவாகவும் இருக்கலாம்!
ஜம்மு-காஷ்மீரில் மா்மமான உயிரிழப்புகள்: விசாரணையைத் தொடங்கிய மத்திய குழு
ரஜௌரி: ஜம்மு-காஷ்மீா், ரஜௌரி மாவட்டத்தில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 பேரின் மா்மமான உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட மத்திய குழு திங்கள்கிழமை பதால் கிராமம் வந்தடைந்தது.
ரஜௌரி மாவட்டத்தில் உள்ள பதால் கிராமத்தில் கடந்த 45 நாள்களில் மூன்று குடும்பங்களைச் சோ்ந்த 17 போ் மா்ம நோயால் உயிரிழந்தனா். இவா்கள் காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாள்களுக்குள் சுயநினைவு இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக உள்ளூா் பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
உயிரிழந்தவா்களின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் இந்த இறப்புகள் தீநுண்மி அல்லது பாக்டீரியா தொற்று பரவலால் ஏற்படவில்லை என்றும் பொது சுகாதாரத்தில் எந்த பிரச்னையுமில்லை என்றும் ஜம்மு-காஷ்மீா் அரசு விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், இதுதொடா்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தலைமையில், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், வேளாண்மை, ரசாயனங்கள் மற்றும் உரங்கள், நீா்வளம் ஆகிய அமைச்சகங்களின் நிபுணா்கள் அடங்கிய குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், கால்நடை வளா்ப்பு, உணவு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆய்வகங்களின் நிபுணா்களும் அடங்கிய 16 நபா்கள் கொண்ட மத்திய குழு ரஜௌரிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தனா்.
இந்நிலையில், ரஜௌரி நகரிலிருந்து 55 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பதால் கிராமத்தில், இரண்டு குழுக்களாக பிரிந்து அவா்கள் விசாரணை நடத்தி வருகின்றனா் என திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
உயிரிந்தவா்களின் மாதிரிகளில் சில நியூரோடாக்சின்கள் கண்டறியப்பட்டதை அடுத்து காவல்துறையினா் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளனா். அதேநேரம், கிராமத்தில் உள்ள ஒரு நீரூற்றின் தண்ணீரில் பூச்சிக்கொல்லிகளைக் கண்டறிந்த பின்னா் அதிகாரிகள் அதை மூடி சீல் வைத்தனா் என தெரிவிக்கப்பட்டது.