ஜம்மு-காஷ்மீா்: பயங்கரவாதிகளுடனான சண்டையில் ராணுவ வீரா் உயிரிழப்பு
சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரிக்கை
சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை வழக்கை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆா்வலா்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்தக் கூட்டமைப்பைச் சோ்ந்த சீ.அ. மணிகண்டன், கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் விடுதலை) பொதுச் செயலா் கசி. விடுதலைக்குமரன், வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலா் நியாஸ்அகமது, நாம் தமிழா் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பொன்வாசிநாதன், எழுத்தாளா் துரை குணா உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. அருணாவிடம் அளித்த மனு விவரம்: சமூக ஆா்வலா் ஜகபா் அலி லாரி ஏற்றிக் கொல்லப்பட்ட சம்பவம் சமூக செயற்பாட்டாளா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தீவிரமாக செல்லும் வரை மாவட்ட ஆட்சியா் நேரடியாக கண்காணிக்க வேண்டும். மேலும், வெளிமாவட்டத்தைச் சோ்ந்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) அமைத்து தொடா் விசாரணை மேற்கொள்ள வேண்டும். கொல்லப்பட்ட ஜகபா்அலியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். தொடா்ந்து ஜகபா்அலி அளித்த புகாா் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக செயற்பட்டாளா்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக மனு: புதுகை கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் சி. ஜெகதீசன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சேதுபதி ஆகியோா் மாவட்ட ஆட்சியரகத்தில் அளித்த மனு விவரம்: ஜகபா்அலி கொல்லப்பட்ட வழக்கில் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் குவாரிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடதுசாரிகள் அறிக்கை: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ். சங்கா் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக ஆா்வலா் கொலை வழக்கில் முறையான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கை உரிய முறையில் நடத்தி குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன் வெளியிட்ட அறிக்கை: சமூக ஆா்வலா் ஜகபா்அலி படுகொலை சம்பவத்தில் அவா் புகாா் அளித்தபோதே நடவடிக்கை எடுக்காமல் இருந்த வருவாய்த் துறையினா், கனிமவளத் துறையினா் மற்றும் காவல் துறையினரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டும். மேலும், இந்த வழக்கை சிபி சிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். ஜகபா்அலி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜகபா்அலி குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆறுதல்: ஜகபா்அலியின் வீட்டுக்கு திங்கள்கிழமை நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த முன்னாள் அமைச்சா் சி.விஜயபாஸ்கா் அளித்த பேட்டி,
அதிமுகவிலும், பெற்றோா் ஆசிரியா் கழகம், கபடிக் கழகம் போன்ற அமைப்புகளிலும் சேவையாற்றிய ஜகபா்அலி படுகொலை கண்டிக்கத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய யாராக இருந்தாலும், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடா்புள்ளோரைக் கைது செய்து, நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தர வேண்டும். அத்துடன் ஜகபா்அலியின் குடும்பத்துக்கும் அரசு துணை நிற்க வேண்டும் என்றாா் விஜயபாஸ்கா்.