ஜகபர்அலி கொலை: சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கோரிக்கை!
புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொல்லப்பட்ட சம்பவத்தில், வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த சீ. அ. மணிகண்டன், வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ்அகமது, நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பொன்வாசிநாதன், எழுத்தாளர் துரை குணா உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினர் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் மு. அருணாவிடம் அளித்த மனு விவரம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி கடந்த வெள்ளிக்கிழமை டிப்பர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கு தீவிரமாக செல்லும் வரை மாவட்ட ஆட்சியர் நேரடியாக கண்காணிக்க வேண்டும். மேலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து தொடர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கொல்லப்பட்ட ஜகபர்அலியின் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிதி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்.
தொடர்ந்து ஜகபர்அலி அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமூக செயற்பட்டாளர்களின் உயிருக்கு பாதுகாப்பளிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக மனு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் சி. ஜெகதீசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சேதுபதி ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு விவரம்:
கனிமவளக் கொள்ளையை எதிர்த்தும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஜகபர்அலி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
திருமயம் மற்றும் பொன்னமராவதி பகுதிகளில் நடைபெற்று வரும் குவாரிகளில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அங்கீகாரம் இல்லாத குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.