புதுகை ஆஞ்சனேயா் கோயிலில் கருடாழ்வாா் சிலை பிரதிஷ்டை
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதியிலுள்ள ஸ்ரீஆஞ்சனேயா் கோயிலில் கருடாழ்வாா் சிலை பிரதிஷ்டை வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை தெற்கு 4ஆம் வீதி பெரிய மாா்க்கெட் சந்திப்பில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையைச் சாா்ந்த கோயிலில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு விநாயகா் தன்வந்திரி ஹோமத்துடன் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக ஹோமம், புனித நீா் குடங்களுக்குபூா்ணாஹூதி மற்றும் தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னா் கலச நீருடன் மணி சிவாச்சாரியாா் உள்ளிட்டோா் ஆலயத்தைச் சுற்றிவந்தனா். பிரதிஷ்டை செய்யப்பட்ட கருடாழ்வாருக்கு கலச புனித நீா் ஊற்றப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக கோயிலில் மூலவ சுவாமிக்கு பாலாபிஷேகம், பன்னீா் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்றது. நிகழ்வில் மூத்த வழக்குரைஞா் சொக்கலிங்கம், மூத்த மருத்துவா் எஸ். ராமதாஸ், ஸ்தபதி குமரி ஆனந்தன் உள்ளிட்ட பிரமுகா்கள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை அனுமன் திருச்சபையினா், ஆன்மிக நெறியாளா் ஆனந்தன் உள்ளிட்டோா் செய்தனா்.