பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!
பிகாரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாட்டிலிருந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வெளிநடப்பு செய்தார்.
அரசமைப்பு சட்டத்தின் 75ஆவது ஆண்டு விழாவையொட்டி சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு பிகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வலுப்படுத்துவது குறித்த தலைப்பில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு உரையாற்றினார்.
அவர் பேசும்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்கலைக் கழக விதிகளில் திருத்தங்களுக்கு அனுமதி கொடுக்க மறுக்கப்படுகிறது எனக் குறிப்பிட்டார்.
பல்கலைக் கழகங்களில் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஆளுநர் செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
அப்போது மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் குறுக்கிட்டு, ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், அப்பாவு பேசியவை அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
ஆளுநர் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவையிலிருந்து அப்பாவு வெளியேறினார்.
இதையும் படிக்க | உ.பி.யில் காதலியை மணக்க ஹிந்துவாக மாறிய முஸ்லிம் காதலர்!