செய்திகள் :

புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 17

post image
தொழில் என்னவோ புத்தகக் கடைதான், ஆனால் அதில் விற்கப்படும் புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும் அமெரிக்க வெள்ளை இனவாத அரசுக்கு நெருக்கடியைத் தரும் அல்லவா...

அமெரிக்கா என்பது மாகாணங்களால் கட்டுண்ட ஒன்றிய அரசு. இருப்பினும், மைய அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டுமென்ற அவசியம் மாகாண அரசுகளுக்கு இல்லை. சுயாதீனமாக சட்டங்களை இயற்றிக்கொள்ளும் அதிகாரம் பெற்ற மாகாண அரசுகள், இனப்பாகுபாட்டை ஊக்குவிப்பதில் விடாப்பிடியாக இருந்தன. அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களை ஒப்பிடுகையில் நியூயார்க் மாகாணம் ஓரளவுக்கு இனவெறி குறைந்த மாகாணமாக விளங்கியது.

ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை

இருந்தாலும் கறுப்பர்கள் திரளாக வாழும் ஹார்லெம் நகரின் மையப்பகுதியில் கறுப்பர்களை உருவேற்றும் ஒரு புத்தகக் கடை செயல்பட்டால் வெள்ளை இனவெறியர்களின் கண்களை உறுத்தாதா? மார்ட்டின் லூதர் கிங் தொடர்பான கேள்விகளைத் தவிர்த்து விட்டு, நேரடியாக வெள்ளை இனவெறியர்களின் மிரட்டல் தொடர்பான கேள்விகளுக்குத் தாவினேன்.

வெள்ளையர்கள் செய்த சம்பவம்!

“மிஷாவ், ஏறக்குறைய 40 ஆண்டுகால புத்தக விற்பனை பயணத்தில் உங்கள் கடைக்கு எதிராக வெள்ளையர்கள் ஏதாவது பிரச்னை செய்திருக்கிறார்களா? உங்களுடைய அண்ணன் லைட்ஃபுட் மிஷாவ் தொடக்க காலத்தில் தெருவில் பாடிக் கொண்டு போனதற்கு எதிராக வெள்ளையர்கள் போலீஸில் புகார் தெரிவித்தார்களே அந்த மாதிரி...” மெலிதாக புன்னகைத்துக் கொண்டே கேட்டேன்.

சிரித்துக் கொண்டே தொடங்கியவர், “நீங்க சொல்றது சரிதான் இவா. ஆனா, இப்போ எங்க அண்ணனுக்கு எதிரா எந்த வெள்ளையராவது புகார் கொடுப்பாரா? இன்னிக்கு அவர் பிரபலமான கிறிஸ்தவ மதத் தலைவர். அவர் கறுப்பராக இருந்தால்கூட, இப்போ யாரும் அவர் மேல புகார் கொடுக்க மாட்டாங்க. நீங்க கேட்டது போல ஒன்றிரண்டு சம்பவங்கள் நடந்திருக்கு.

ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை

ஆனா, இது ஒரு புத்தகக் கடைங்கிறதால வெள்ளை இனவெறியர்களின் கண்களுக்கு அவ்வளவு அபாயமா தெரியல போல. அதேசமயம், புத்தகக் கடைதானேன்னு ஏனோ தானோன்னு விட்டுடுமா உளவுத்துறை? நிறுவனங்களுக்கு எதிராக (Anti Establishment) இயக்கம் கட்டி செயல்பட்டால் அப்படிப்பட்ட செயற்பாட்டாளர்களை உளவுத்துறை கண்காணிப்பது வழக்கம்தான். தனி மனிதன் ஒருவன் அப்படிப்பட்டச் சிந்தனையில் இருந்தால் உளவுத்துறை பெரிய அளவில் அவரைக் கண்டு கொள்ளாது. ஆனால், அப்படிப்பட்ட தனிமனிதனைக் கண்காணிக்கவே பிரத்யேகமாக உளவாளிகளைப் போட்டு, தனிக் கோப்புகளை கையாளும் நிலைமையில் அமெரிக்கா பயந்து போய் கிடக்கிறது. அப்படி இருக்கையில், நானும் என் புத்தகக் கடையும் அரசின் கண்காணிப்பிலிருந்து தப்பி விடுமா? அந்தக் கதையை அப்புறம் சொல்கிறேன். இப்போ நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன். 

ஹார்லெம் - கறுப்பர்களின் கோட்டை

“கறுப்பின மக்களுக்காக கறுப்பர்களால் எழுதப்பட்ட புத்தகங்களைக் கொண்ட கடையாக என்னுடைய கடை செயல்பட்டாலும் ஏராளமான வெள்ளையர்களும் என்னுடைய கடைக்கு வந்து போய்க்கிட்டுத்தான் இருந்தாங்க. ஹார்லெம் என்பது கறுப்பின மக்களின் கோட்டை. அதனால் பெரிய அளவில் எனக்கு வெள்ளை இனவெறியர்களால் அச்சுறுத்தல் இருந்ததில்லை. ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நினைவுக்கு வருது. அது 1956-ம் வருஷம்னு நினைக்கிறேன். நியூயார்க்வாசி எழுதிய ஒரு கடிதம் எங்க கடைக்கு வந்தது.

அந்தக் கடிதத்துல எழுதியிருந்ததை வச்சி அதை ஒரு வெள்ளைக்காரர்தான் எழுதி இருக்கணும்னு நினைச்சேன். அந்தக் கடிதத்துல, ‘அந்த அசுத்தமான குப்பையை உங்கள் கடையிலிருந்து அகற்றி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் அவருடைய இரட்சிக்கும் சக்தியையும் அந்த இடத்தில் வைக்கவும். இல்லையென்றால், நீங்கள் நிச்சயமாக நரகத்தில் எரிக்கப்படுவீர்கள். உங்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன், இயேசு கிறிஸ்துவுக்குள் கறுப்பு நிறமே கிடையாது. கடவுளும் கடவுளின் குடும்பமும் வெள்ளையர்கள்தான்.’ அப்டின்னு இருந்துச்சு... ஏதாவது உங்களுக்குப் புரியுதா இவா...?”

“புரியலையே... ஏதோ சம்பவம் பண்ணியிருக்கீங்க போல. வழக்கம் போல, உங்களுடைய குறும்புத்தனத்தால் பாதிக்கப்பட்ட யாரோ ஒரு வெள்ளையர் நரகத்தைக் காட்டி உங்களை பயமுறுத்தி இருக்கிறார்...”

“ஆமா... என்னோட கடை வாசல்ல ஒரு போர்ட் இருக்கும். அதுல கறுப்பு நிறத்துல இயேசு கிறிஸ்துவின் படம் இருக்கும், அதுக்கு கீழே, ‘உண்மையில் இயேசு கிறிஸ்து கறுப்பராகவே இருந்தார் (Christ was black as a matter of fact)’ என தலைப்பிட்டிருந்தேன். அதோடு விட்டிருந்தால்கூட கடிதம் எழுதின ஆளுக்கு கோபம் வந்திருக்காது. அந்தத் தலைப்புக்கு கீழே, இயேசு கறுப்பர்தான் என்பதற்கு ஆதாரமாக, யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் ஒண்ணுல வர்ர, ‘அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது (His feet were like burnished bronze when it has been heated to a glow in a furnace)’ அப்டிங்கிற 15வது வசனத்தையும் எழுதி வச்சதுதான் அவர் மனசை நோகடிச்சிருக்கும்.”

“பின்ன, கோபம் வராம என்ன செய்யும் புரஃபஸர்... நமட்டுத்தனமாக விஷமம் செய்வதுன்னு சொல்வாங்களே, அது இதுதானா?”

“அதேதான் இவா... இதே மாதிரி நான் பண்ணின இன்னொரு சேட்டை கோர்ட் வரைக்கும் போயிடுச்சு. ஆனா, அந்த வழக்குல நான் நீதிமன்றத்துக்கு கட்டுப்படுறது போல ஆகிடுச்சி...”

“அது என்ன சமாச்சாரம் மிஷாவ்?” நேர்காணலைத் தாண்டி, ஆர்வ மிகுதியில் கதை கேட்கும் மனநிலைக்கு நான் ஆட்பட்டேன்.

“‘நாசமாய்ப் போன வெள்ளைக்காரன் (The Goddam White Man)’ - இந்தத் தலைப்புல ஒரு புத்தகம் இருப்பது உங்களுக்கு தெரியும்தானே...”

“ஆமா, டேவிட் லிட்டன் (David Lytton) எழுதியது..."

``அதேதான். அந்தப் புத்தகம் 1960-ம் ஆண்டு வெளியானது, அந்தப் புத்தகத்தை எழுதியவர் தென்னாஃப்ரிக்காவைச் சேர்ந்த வெள்ளையர். அவரோட நாட்டுல நிலவிய இனப்பாகுபாட்டைப் பத்தி அந்தப் புத்தகத்துல எழுதி இருந்தாரு. அதனால தென்னாஃப்ரிக்காவுல அந்தப் புத்தகத்தை தடை செஞ்சிட்டாங்க. அந்தப் புத்தகத்தின் அட்டையை பெரிய போர்டாக செஞ்சி என் கடை வாசலில் வச்சிருந்தேன். அந்த போர்டை வச்ச ஒன்றிரண்டு நாட்கள்ல, என்னோட கடைக்கு போலீஸ் படையே வந்திடுச்சு. ‘உங்க கடையைப் பத்தி எங்களுக்குத் தெரியும். இதுவரைக்கும் ஓகே. ஆனா, இப்போ இந்தப் பகுதிக்கு வந்து போற வெள்ளைக்காரர்களிடம் இருந்து புகார் வந்திருக்கு.

நிலைமையை மோசமாக்குற விதத்துல இருக்குன்னு அவங்க கம்ப்ளெயின்ட் பண்ணியிருக்காங்க. அதனால, இந்த போர்டை எடுத்திருங்க. நீங்க புத்தக வியாபாரம் பண்ணுறீங்கன்னு பார்த்தா, இளைஞர்களை தவறா வழி நடத்துற செயலா இது இருக்கு. வெள்ளைகாரர்களை வசைபாடுற மாதிரி போர்ட் வச்சிருக்கிறத உங்க ஆளுங்ககூட விரும்பல...’ அப்டின்னு நீளமா வசனம் பேசுனாங்க...”

“ஓஹோ... அந்தப் புத்தகத்துக்கு பின்னாடி இப்படி ஒரு சம்பவமும் இருக்கா?”

“இன்னும் இருக்கு. முழுசா கேளுங்க இவா. ‘நல்லதுங்க. அந்த போர்டுல என்ன இருக்கு? அது ஒரு புத்தகத்தோட தலைப்பு. அந்த புத்தகத்தை பதிப்பிச்ச பதிப்பாளர்ட்ட போய், புத்தகத்த அச்சடிக்க வேணாம்னு சொல்லுங்க.

நானும் அப்ப விற்க முடியாதுல்ல. அது வரைக்கும் நானும் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்வேன்’னு ரொம்ப கறாரா சொல்லிட்டேன். போலீஸ் கும்பல் அமைதியா போயிட்டாங்க...”

“ஓஹோ... வெரி குட்”

“ஒவ்வொரு நாளும் பிரச்னையோடு எழும்புவதைத்தான் நான் விரும்புவேன். பிரச்னையே இல்லைன்னாலும் அன்றைய தினம் புதிய பிரச்னையை உருவாக்கிக் கொள்வேன். வந்த போலீஸ் வெறுங்கையை வீசிக்கிட்டு போனதால எனக்கு ஏமாற்றமா போச்சி. ஆனா, பிரச்சினை அத்தோடு முடியல. போர்டை எடுக்காம இருப்பதற்கான காரணத்தை விளக்க வேண்டும்னு, நீதிமன்றத்துல இருந்து சம்மன் வந்திடுச்சி. வக்கீல் வைத்துக் கொள்ளாமல், நானே எனக்காக வாதாடினேன்.”

“ஜட்ஜுக்கும் உங்களுக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே சொல்லுங்க. அந்தப் பகுதியை மட்டும், அதே விசாரணை வடிவில் பத்திரிகைல பிரசுரிக்க எடிட்டரிடம் சொல்கிறேன்.” 

நான் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் The Spirit பத்திரிகை காமிக் பத்திரிகை. லூயிஸ் மிஷாவ்வின் பேட்டியை எந்த வடிவத்தில் பிரசுரிக்கப் போகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. மற்ற பத்திரிகைகளில் வருவது போல ஒரு போட்டோவை போட்டு பேட்டியை அப்படியே பிரசுரிக்கப் போகிறார்களோ அல்லது காமிக் வடிவில் பிரசுரிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. என்னுடைய கோரிக்கைக்கு சம்மதம் தெரிவிப்பது போல தலையசைத்து மிஷாவ் தொடர்ந்தார்.

நீதிபதி: “அந்த போர்ட் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது.”

மிஷாவ்: “இதற்கு என்னுடைய தரப்பில் இருந்து சொல்ல குறிப்பாக எதுவும் இல்லை. ஆனால், போலீஸ் பற்றி சில விஷயங்களை சொல்ல வேண்டும்.”

நீதிபதி: “போலீஸ் பற்றியா?”

மிஷாவ்: “ஆமாம் கனம் நீதிபதி அவர்களே, அவங்களால படிக்க முடியாது. அதனால, உங்கள் முன்பாக ஒரு புத்தகத்தை வைக்கிறேன். அது வெப்ஸ்டர்ஸ் அகராதி.” நான் கையோடு கொண்டு போயிருந்த அகராதியை நீட்டினேன்.

நீதிபதி: “இந்த வழக்குக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

மிஷாவ்: “நிறைய இருக்கு கனம் நீதிபதி அவர்களே, நான் என் கடை முன்பாக வைத்திருக்ககூடிய போர்டில், G-o-d-d-a-m White Man அப்டின்னு இருக்கு. அதுக்கு, ‘வெள்ளையர் எங்கோ சூழப்பட்டிருக்கிறார்’ என்றுதான் அர்த்தம். அதில் ‘n’ என்ற எழுத்து சேர்க்கப்படவில்லை.”

“நல்லதுங்க. நான் நாசாமாய்ப்போக...” நீதிபதி கேலியாகச் சொல்லி என்னை உற்றுப் பார்த்தார். 

“நகைப்புக்குரிய அளவுக்குத்தான் இந்த விஷயத்தை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதாக புரிந்து கொண்டது போல நீதிபதி காட்டிக் கொண்டாலும், கடை முன்பாக வைக்கப்பட்ட அந்தப் பலகை இனவெறுப்பை ஊக்குவிக்கும் என தீர்ப்பளித்தார். எப்படி உச்சரிக்கிறோம் என்பதல்ல விஷயம் என்று கூறி, உடனே அதை அகற்ற வேண்டும்னு உத்தரவிட்டார்.

நானும் அகற்றுவதாக ஒப்புக் கொண்டேன் இவா. புத்தக விற்பனை எனக்கு முக்கியம். சில நேரங்களில் இப்படி நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டியிருக்கு…”

லூயிஸ் மிஷாவ் விவரித்த இந்தப் பகுதியை உரையாடல் வடிவில் பிரசுரிக்க வேண்டுமென்பதை, என்னுடைய நோட்புக்கில் குறித்துக் கொண்டேன்.

- பக்கங்கள் புரளும்

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் – அத்தியாயம் 5 | தொடர்கதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க

மார்ட்டின் லூதர் கிங் கொலை முயற்சியில் மிஷாவ்- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 16

கறுப்பர்களை இனப்பாகுபாட்டோடு நடத்துவதற்கு எதிராக, அமெரிக்காவில் ஏராளமான குடியுரிமை அமைப்புகள் போராடி வந்தன.அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் செயல்பட்ட ‘தெற்கு கிறிஸ்துவ ... மேலும் பார்க்க

தற்சார்பு பொருளாதாரமும் புத்தகக் கடையும் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 15

அடிமை முறையை அமெரிக்க மண்ணிலிருந்து சட்டப்பூர்வமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் மேலெழுந்த 19-ம் நூற்றாண்டிலேயே, புத்தகக் கடைகள் - கறுப்பர்களுக்கான பிரத்யேக புத்தகக் கடைகள் அமெரிக்காவில் உதயமாகத் த... மேலும் பார்க்க

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிர... மேலும் பார்க்க

`காகித நேசம்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 13

அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.ஆனால், மிஷாவ் தன் மனைவியின் ப... மேலும் பார்க்க

கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்... கேட்பீர்களா?! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க