பெண் மருத்துவா் படுகொலை குற்றவாளிக்கு மரண தண்டனை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் ...
F1 Race வரலாற்றில் முதல் பெண் ரேஸ் இன்ஜினீயர் - யார் இந்த லாரா முல்லர்?
உலகப் புகழ் பெற்ற கார் பந்தயமாக F1 ரேசில் முதல் பெண் ரேஸ் இஞ்ஜினீயராக தேர்வாகியிருக்கிறார் லாரா முல்லர்.
ஜெர்மனியைச் சேர்ந்த லாரா, ஹாஸ் நிறுவனத்தின் சார்பாக அவர்களது குழுவில் முதன்முறை ஓட்டுநராக அறிமுகமாகும் எஸ்டெபன் ஓகான் என்பவருக்கு இன்ஜினீயராகச் செயல்படவுள்ளார்.
2025ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும் போட்டிகள் இந்த இணைக்கு தொடக்கமாக அமையும். ட்ராக்கில் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் பயணிக்கும்போது ஓட்டுநர் தொடர்புகொள்ளும் நபராக லாரா செயல்படுவார்.
2022ம் ஆண்டு ஹாஸில் சேர்ந்த லாரா வாகனத்தின் செயல்திறனை கண்காணிக்கும் position performance engineer-ஆகப் பணியாற்றினார். அவரது குழுவினர் லாரா வேலையில் உறுதியான நெறிமுறைகளைப் பின் தொடர்வதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது லாரா இஞ்ஜினீயராகி அணியை வழிநடத்தும் இடத்துக்கு வந்துள்ளார்.
F1 பந்தயங்களைப் பொறுத்தவரை ரேஸ் இன்ஜினீயர் என்பது ட்ராக்கில் இருக்கக் கூடிய மிக உயர்ந்த பதவி. ஓட்டுநருக்கும் அணியினருக்கும் உத்தரவுகளை வழங்குவதன் மூலம் மொத்த செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருப்பார்.
லாரா மிகவும் தீர்மானமான சுபாவம் கொண்டவர் மற்றும் கடினமாக உழைக்கக் கூடியவர் எனக் கூறும் ஹாஸ் குழுவினர், ஓட்டுநர் எஸ்டெபன் ஓகான்னுக்கு பொருத்தமான இஞ்ஜினீயராகச் செயல்படுவார் என்கின்றனர்.
ஹாஸ் குழுவின் உறுப்பினர் ஒருவர், "லாராவின் வேலை நெறிமுறைகள் சிறந்தவை. உதாரணமாக ஒரு பிரச்னையை அவர் கண்டார் என்றால் அதன் ஆழம் வரை சென்று சரிசெய்வார். சிலர் முதல் பதில் கிடைத்ததுமே திருப்தி அடைந்துவிடுவர். ஆனால் லாராவுக்கு ஒரு பிரச்னையின் கீழ் 10 பிரச்னைகள் ஒழிந்திருப்பது தெரியும். அவர் அனைத்தையும் சரிசெய்யும் வரை முடிக்க மாட்டார்." என்றார்.
மேலும், "எங்கள் அணிக்கு நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பதோ, எந்த பாலினம் என்பதோ முக்கியம் இல்லை. வேலைதான் முக்கியம். நீங்கள் எப்படி அணியுடன் ஒருங்கிணைகிறீர்கள் என்பதுதான் முக்கியம்" என்றார் அவர்.