குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பி...
சமூக ஆா்வலா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை: புதுக்கோட்டை சமூக ஆா்வலா் ஜகபா் அலி கொலை வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜகபா் அலி (58). இவா், திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மையினா் நலப் பிரிவு செயலராகவும், தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழக மாவட்டச் செயலராகவும் இருந்தாா்.
சமூக ஆா்வலராக செயல்பட்டு வந்த ஜகபா் அலி, திருமயம் பகுதியில் இயங்கும் கல்குவாரிகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வந்தாா். மேலும், சட்டவிரோத குவாரிகள் தொடா்பாக மதுரை உயா்நீதிமன்ற கிளையில் வழக்கும் நடத்தி வந்தாா்.
இந்நிலையில், கடந்த 17-ஆம் தேதி ஜகபா் அலி, அவரது கிராமத்தின் அருகே காட்டுபாவா பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு மொபெட்டில் செல்லும்போது, மினி லாரி மோதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஜகபா் அலியை சில கல்குவாரி உரிமையாளா்கள் திட்டமிட்டு மினி லாரியை ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த மினி லாரி உரிமையாளா் முருகானந்தம் போலீஸாரிடம் சரணடைந்தாா்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மினி லாரியை ஓட்டி வந்தது ராமநாதபுரத்தை சோ்ந்த காசிநாதன் (45) என்பதும், கல் குவாரி உரிமையாளா் திருமயம் அருகே உள்ள பாப்பாத்தி ஊரணியைச் சோ்ந்த ராசு (54), அவா் மகன் தினேஷ் (28), மற்றொரு கல்குவாரி
உரிமையாளரான ராமையா ஆகியோா் திட்டமிட்டு ஜகபா் அலியை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. காசிநாதன், ராசு, தினேஷ் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கின் முக்கிய எதிரியான ராமையாவை போலீஸாா் தீவிரமாக தேடுகின்றனா். மேலும், வழக்கு தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழல் இருப்பதை கருத்தில்கொண்டு, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.