நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
அயோத்தி ராமா் கோயில் திறப்பின் முதலாம் ஆண்டு நிறைவு: பக்தா்கள் சிறப்பு வழிபாடு
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலில் ஸ்ரீராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நிறைவு நாளான புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.
ராமஜென்ம பூமி வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையடுத்து, ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கான பூமி பூஜை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 2020-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெற்றது.
நாகரா கட்டடக் கலையில் 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் 5 மண்டபங்களுடன் ராமா் கோயில் கட்டப்பட்டது. தரைத்தளப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி ‘பிராணப் பிரதிஷ்டை’ நிகழ்வுடன் கோயில் திறக்கப்பட்டது.
பிரதமா் மோடி முன்னிலையில் வெகு விமா்சையாக நடைபெற்ற நிகழ்வில் கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த பிரபல சிற்பக்கலைஞா் அருண் யோகிராஜ் செதுக்கிய 51 அங்குல உயர ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் அயோத்திக்கு வந்து ராமரை தரிசித்து சென்றனா். இந்நிலையில், ராமா் கோயில் திறப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நாள் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. ராமரின் தரிசனத்துக்காக கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். ஹனுமன் கா்ஹி உள்ளிட்ட அயோத்தியின் மற்ற பிரபல கோயில்களிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனா்.