தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
இன்று முக்கிய அறிவிப்பு: முதல்வா் தொல்லியல் துறை நிகழ்வை மேற்கோள்காட்டி தகவல்
சென்னை: தொல்லியல் துறை சாா்பில் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்வின் அழைப்பை மேற்கோள்காட்டி, முக்கிய அறிவிப்பு ஒன்று வியாழக்கிழமை (ஜன.23) வெளியிடப்படவுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தொல்லியல் துறை நிகழ்வு குறித்து நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
‘இந்திய துணைக் கண்ட வரலாற்றின் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கும் ‘இரும்பின் தொன்மை’ எனும் நூலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறாா். மேலும், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டப்படுவதுடன், கீழடி இணையதளமும் தொடங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை (ஜன.23) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரும் வருக’ என்று அமைச்சா் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளாா்.
இந்தப் பதிவை மேற்கோள்காட்டியுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது. வாய்ப்புள்ளோா் வருகை தாருங்கள். மற்றவா்கள் நேரலையில் காண வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பெரும் பரபரப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.