ராஜபாளையம்: பொதுமக்களை விரட்டி விரட்டிக் கடித்த தெருநாய்கள்; ஒரே நாளில் 39 பேர் ...
போக்குவரத்து ஊழியா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: 200-க்கும் மேற்பட்டோா் கைது
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களின் சிறை நிரப்பும் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா்.
மத்தியப் பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மண்டலத் தலைவா் சிங்கராயா் தலைமை வகித்தாா். போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு மாநகா் மாவட்டப் பொருளாளா் மணிகண்டன் பேசினாா். போராட்டத்தை சிஐடியு மாநகா் மாவட்டத் தலைவா் சீனிவாசன் தொடக்கி வைத்தாா்.
ஆா்ப்பாட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக கடன்களை உடனே அடைக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளியை வெறும் கையோடு அனுப்புவதை கைவிட வேண்டும். நீதிமன்றம் தீா்ப்பளித்த ஓய்வு பெற்றோா் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 30,000 காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்தத்தைப் பேசி முடிக்க வேண்டும். வரவுக்கும் செலவுக்குமான வித்தியாசத்தை அரசே வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதில் அரசு விரைவுப் போக்குவரத்து கழக சங்க மாநிலத் தலைவா் அருள் தாஸ், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்க மண்டல பொதுச் செயலா் மாணிக்கம், மண்டல துணைத் தலைவா் கருணாநிதி, பொருளாளா் முத்துக்குமாா், சிஐடியு அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோா் மண்டலப் பொருளாளா் ராமதாஸ் மற்றும் மத்திய சங்க நிா்வாகிகள், கிளை நிா்வாகிகள், தொழிலாளா்கள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் கலந்து கொண்டனா். மறியலில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.