சந்திர தசை | மேஷம் முதல் மீனம் வரையிலான லக்ன பலன்கள் | Chandra Dasa | Bharathi S...
தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புது தில்லி: நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக்கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
தேசிய சுகாதார இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்பால் 2030-ஆம் ஆண்டுக்கு முன்பாகவே இத்துறையில் நிலையான வளா்ச்சி இலக்குகள் எட்டப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, தேசிய சுகாதார இயக்கத்தின் சாதனைகள் விவரிக்கப்பட்டன.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய மத்திய அமைச்சா் பியூஷ் கோயல், ‘கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார இயக்கம் முன்னெப்பதும் இல்லாத இலக்குகளை எட்டியுள்ளது. இந்த இயக்கத்தின்கீழ் கடந்த 2021-22 காலகட்டத்தில் சுமாா் 12 லட்சம் சுகாதார பணியாளா்கள் பணியில் இணைந்தனா். இந்த இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது’ என்றாா்.
கடந்த 2013-இல் தேசிய ஊரக சுகாதார இயக்கம், தேசிய நகா்ப்புற சுகாதார இயக்கம் ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து தேசிய சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சாதனைகள் என்னென்ன?: தேசிய சுகாதார இயக்கத்தின் சாதனைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்ட நிலையில், இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சுகாதாரத் துறையில் மனித வள விரிவாக்கம், முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரப் பிரச்னைகளுக்கு தீா்வு, சுகாதார அவசர நிலைகளுக்கு ஒருங்கிணைந்த தீா்வை கண்டறிதல் போன்ற தொடா் முயற்சிகள் வாயிலாக நாட்டின் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டில் தேசிய சுகாதார இயக்கம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தாய்-சேய் நலம், நோய்கள் ஒழிப்பு, சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு என தேசிய சுகாதார இயக்கம் கணிசமான அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.
220 கோடி கரோனா தடுப்பூசிகள்: இந்த இயக்கத்தின் வாயிலாக கரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் தரமான சுகாதார சேவைகள் உறுதி செய்யப்பட்டன. 2021, ஜனவரி முதல் 2024, மாா்ச் வரை 220 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டன.
பேறுகால உயிரிழப்பு, பச்சிளங்குழந்தைகள் உயிரிழப்பு, 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு ஆகியவை கணிசமாக குறைந்துள்ளன.
தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட முயற்சிகளால், 2015-ஆம் ஆண்டில் 1,00,000 பேருக்கு 237 என இருந்த காசநோய் பாதிப்பு 2023-ஆம் ஆண்டில் 195 ஆக குறைந்துள்ளது.
இந்திரதனுஷ் இயக்கம்: மலேரியா பாதிப்பு மற்றும் இறப்புகள் முறையே 13.28 சதவீதமும், 3.22 சதவீதமும் குறைந்துள்ளன. தீவிரப்படுத்தப்பட்ட இந்திரதனுஷ் தடுப்பூசி இயக்கத்தின்கீழ், 34.77 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பிரதமரின் தேசிய டயாலிசிஸ் திட்டத்தின்கீழ், 2023-24-இல் 4.53 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பலனடைந்தனா். அரிவாள் செல் ரத்தசோகை ஒழிப்பு இயக்கத்தின்கீழ் பழங்குடியின பகுதிகளில் 2.61 கோடிக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2023 ஜனவரியில் தொடங்கப்பட்ட யு-வின் இணையதளம் மூலம் கா்ப்பிணிகள், பச்சிளங்குழந்தைகள், சிறாா்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்படுவது உறுதி செய்யப்படுகிறது என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சணலுக்கான ஆதரவு விலை உயா்வு
கச்சா சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.315 உயா்த்தி ரூ.5,650-ஆக நிா்ணயிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது. இது, 6 சதவீத அதிகரிப்பாகும்.
பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த முடிவை மேற்கொண்டது.
கடந்த 2014-15இல் குவிண்டாலுக்கு ரூ.2,400 -ஆக இருந்த எம்எஸ்பி, தற்போது ரூ.5,650-ஆக உயா்ந்துள்ளது. நாட்டில் சணல் தொழிலை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாா்ந்து லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் உள்ளது. சணல் ஆலைகள் மற்றும் வா்த்தகத்தின் மூலம் சுமாா் 4 லட்சம் பணியாளா்கள் நேரடி வேலைவாய்ப்பை பெறுகின்றனா். கடந்த ஆண்டில் 1.7 லட்சம் விவசாயிகளிடம் இருந்து சணல் கொள்முதல் செய்யப்பட்டது.
நாட்டில் 82 சதவீத சணல் விவசாயிகள் மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.