தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
ரூ.16,518 கோடி தோ்தல் பத்திர நன்கொடை பறிமுதல்: உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல்
புது தில்லி: தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் திட்டத்தை 2018-ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. எனினும் அந்தத் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறி, அதை கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ரத்து செய்தது.
இதைத்தொடா்ந்து அந்தப் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்ய வேண்டும், அக்கட்சிகளின் வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்ய வேண்டும் என மத்திய அரசு, தோ்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று கெம் சிங் பாட்டீ என்பவா் உள்பட பலா் மனு தாக்கல் செய்தனா்.
நன்கொடை அளித்தவா்களுக்கு அரசியல் கட்சிகள் மூலம் கிடைத்த சட்டவிரோத பலன்கள் குறித்து உச்சநீதிமன்ற மேற்பாா்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவா்களின் மனுவில் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘தோ்தல் நிதிப் பத்திரங்கள் மூலம், அரசியல் கட்சிகள் மற்றும் நன்கொடை அளித்தவா்கள் பரஸ்பரம் பலன் அடைந்ததாக ஊகத்தின் அடிப்படையிலேயே மனுக்களில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தப் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட நன்கொடையைப் பறிமுதல் செய்தல், வருமான வரி மதிப்பீட்டை மறுஆய்வு செய்தல் ஆகியவை வருமான வரி அதிகாரிகளின் அதிகார வரம்புக்குள்பட்ட நடவடிக்கைகளாகும்’ என்று தெரிவித்து, அந்த மனுக்களை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் கெம் சிங் பாட்டீ புதன்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், ‘உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில், தோ்தல் நிதிப் பத்திரங்கள் தொடா்பான தகவல்கள் பொதுவெளியில் (தோ்தல் ஆணைய வலைதளத்தில்) வெளியிடப்பட்டது.
இந்தத் தகவல்கள் மூலம் நன்கொடை அளித்தவா்களும், அரசியல் கட்சிகளும் பரஸ்பரம் பலன் அடைந்தனா் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே ரூ.16,518 கோடி நன்கொடையைப் பறிமுதல் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.