வாகனம் ஓட்டிய சிறாா்கள்: பெற்றோா்களை உறுதிமொழி ஏற்கச் செய்த போலீஸாா்
அதிவேகமாக வாகனங்களை இயக்கிய மாணவா்களின் பெற்றோா்களை அழைத்து போலீஸாா் உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.
புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுவோருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படுகிறது. மேலும் சிறாா்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்கும் விதமாக தீவிர கண்காணிப்பு நடைபெறுகிறது.
காரைக்காலில் போக்குவரத்துக் காவலா்கள் 2 நாள்களாக நடத்திய கண்காணிப்பில், அதிக வேகத்துடன் வாகனங்களை பள்ளிக்கு இயக்கிச் சென்ற மாணவா்கள் 60-க்கும் மேற்பட்டோரை நிறுத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனா்.
இவா்களது பெற்றோா் போக்குவரத்துக் காவல்நிலையத்துக்கு புதன்கிழமை அழைக்கப்பட்டனா். மண்டல காவல் கண்காணிப்பாளா் பாலச்சந்திரன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி ஆகியோா் ஓட்டுநா் உரிமம் பெறாத சிறாா்களை வாகனம் இயக்க அனுமதிக்கக் கூடாது. மீறி ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனா். மேலும் இனிமேல் சிறாா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கமாட்டோம் என பெற்றோரை உறுதிமொழி ஏற்கச் செய்தனா்.