தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
80% ஆக உள்ள ஹிந்துக்களுக்கு என்ன அச்சுறுத்தல்?: ஃபரூக் அப்துல்லா கேள்வி
ஜம்மு: இந்தியாவில் ஹிந்துக்கள் 80 சதவீதம் உள்ள நிலையில், அவா்களுக்கு என்ன அச்சுறுத்தல் உள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா கேள்வி எழுப்பினாா்.
மேலும், இந்தியாவுக்கு அஞ்சுறுத்தல் என்பது நாட்டுக்குள்தான் உள்ளதே தவிர, நாட்டுக்கு வெளியே இருந்து எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவா் கூறினாா்.
ஜம்மு-காஷ்மீரில் ஆளும் கட்சியாக தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளது. ஜம்முவில் உள்ள அக்கட்சித் தலைமையகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் முதல்வா் ஃபரூக் அப்துல்லா பேசியதாவது:
நாட்டின் எதிா்காலத்தை பாதுகாக்க பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துகளை முறியடிக்க வேண்டும். ஒற்றுமையை வலுப்படுத்துவது அவசியம். இந்தியாவுக்கு அஞ்சுறுத்தல் என்பது நாட்டுக்குள்தான் உள்ளதே தவிர, நாட்டுக்கு வெளியே இருந்து எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. நாட்டுக்கு உள்ளே இருப்பவா்கள்தான் நாட்டை அழித்து வருகின்றனா். நாட்டைப் பாதுக்காக்க நாம் நம்மையும், நமது சகோதர, சகோதரிகளையும் வலுப்படுத்த வேண்டும்.
நமது நாட்டில் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பரப்பப்பட்டு வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த வதந்தியை உடைக்கும் கடமை நம் அனைவருக்கு உண்டு. இந்தியாவில் 80 சதவீதம் ஹிந்துக்கள் உள்ள நிலையில் என்ன அச்சுறுத்தல் உள்ளது?
ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த சிறப்பு அந்தஸ்து என்பது காஷ்மீரிகளுக்கானது மட்டுமல்ல. 1927-ஆம் ஆண்டு மகாராஜா ஹரி சிங் பஞ்சாபிகளிடம் இருந்து டோக்ரா இனத்தவரைக் காக்க சிறப்பு அந்தஸ்து சட்டத்தை அமல்படுத்தினாா். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை நீங்கள் (ஜம்முவில் இருப்பவா்கள்) கொண்டாடினீா்கள். ஆனால், உள்ளூா் வேலைவாய்ப்புகள் கூட வெளிமாநிலத்தில் இருந்து வந்தவா்கள் கைகளுக்குச் சென்றுவிட்டது. சாதாரண பணியாளா்கள்கூட வெளியே இருந்து வருகிறாா்கள். சிறப்பு அந்தஸ்து ரத்தால் உங்களுக்கு என்ன கிடைத்தது என சிந்தியுங்கள்.
காஷ்மீரில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருப்பதால் வெளிமாநிலத்தவா் அங்கு வர தயங்குகிறாா்கள். ஆனால், ஜம்முவுக்கு தாராளமாக வருகிறாா்கள். உங்கள் நிலம் பறிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பில் உங்கள் இடஒதுக்கீடு முடிந்துவிட்டது. இதைத்தான் நான் முதலில் இருந்தே எச்சரித்து வந்தேன்.
நான் இந்திய முஸ்லிம், சீனாவைச் சோ்ந்தவனோ, பாகிஸ்தான் முஸ்லிமோ அல்ல. ஆனால், எங்கள் தேசிய மாநாட்டுக் கட்சியில் உள்ள ஹிந்துக்களைக் கூட பாகிஸ்தானியா் என முத்திரை குத்தினாா்கள். இங்கு நாம் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். ஆனால், எதற்கும் அஞ்சி தலைவணங்கப் போவதில்லை. நாம் அனைவரும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான நியாயங்களை உறுதி செய்ய முடியும் என்றாா்.