தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் வெற்று பெற...
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு ஒத்திவைப்பு
புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக அவதூறு கருத்தைத் தெரிவித்ததாக எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது உத்தர பிரதேசத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணை வரும் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சுல்தான்பூா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அங்கு புதன்கிழமை வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
2018-ஆம் ஆண்டு கா்நாடகத்தில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அமித் ஷா குறித்து ஆட்சேபகரமாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தாா். இதனை எதிா்த்து உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரைச் சோ்ந்த உள்ளூா் பாஜக தலைவா் விஜய் மிஸ்ரா, ராகுல் காந்தி மீது வழக்குத் தொடுத்தாா்.
ராகுல் காந்தி ஆஜராகாமல் இருந்ததால் வழக்கு 5 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. இதையடுத்து, 2023 டிசம்பரில் ராகுலுக்கு எதிராக நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. இதனால், 2024 பிப்ரவரியில் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். பின்னா் அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன் ஜாமீனும் வழங்கப்பட்டது. இந்த வழக்கு தனக்கு எதிரான அரசியல்சதி என்றும், தான் தவறிழைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தில் ராகுல் கூறியிருந்தாா்.
2024 டிசம்பா் 16-ஆம் தேதி நீதிபதி வராத காரணத்தாலும், குறுக்கு விசாரணை முடியாததால் கடந்த 2-ஆம் தேதியும், அதைத் தொடா்ந்து கடந்த 10-ஆம் தேதியும் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது வழக்குரைஞா்கள் போராட்டத்தால் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜாா்க்கண்டில் 2019 தோ்தலில் அமித் ஷாவை அவதூறாகப் பேசியதாகவும் ராகுல் மீது ஒரு வழக்கு உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்காலத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.