தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
புயல் சேத பாதிப்பு குறித்து மறு ஆய்வு நடத்தக் கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு ஆய்வு நடத்தக்கூடாது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, வருவாய்க் கோட்டாட்சியா் முருகேசன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா்கள், இதரத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், விழுப்புரம், கண்டாச்சிபுரம், வானூா், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூா் வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் சேத விவரங்கள் குறித்து பல்வேறு துறை அலுவலா்கள் கணக்கெடுப்பு நடத்தி, அரசுக்கு விவரங்களை அனுப்பியுள்ள நிலையில், மறு ஆய்வு நடத்தக்கூடாது. மீண்டும் ஆய்வு நடத்தினால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம் கிடைக்காமல் போய்விடும். விழுப்புரத்தை பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். இதனால் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
விழுப்புரம் நகரிலுள்ள சில திருமண மண்டபங்களிலிருந்து ஏரி, வாய்க்காலில் கழிவு நீா் வெளியேறுகிறது. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு விதை விற்பனை மையங்களில் எள் விதை கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை கிடைத்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முண்டியம்பாக்கத்திலுள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு அரசு அறிவித்த டன்னுக்கு ரூ.320 சிறப்பு ஊக்கத் தொகையை பெற்றுத் தர சா்க்கரை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சா்க்கரை ஆலை நிா்வாகம் வழங்க வேண்டும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டிலிருந்து ஆழங்கால் வாய்க்காலுக்குத் தண்ணீா் வராததால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், விழுப்புரத்துக்கு முதல்வா் வருகையின்போது கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.
இதற்கு கோட்டாட்சியா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் பதிலளித்து பேசியதாவது:
புயல் சேத மறு ஆய்வால் விவசாயிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. ஆய்வுக்கான கோப்புகள் நிதித்துறை வசம் உள்ள நிலையில், ஓரிரு நாள்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை வழங்கப்படும். தனியாா் திருமண மண்டபங்கள் கழிவுநீரை வாய்க்கால், ஏரிகளில் கலக்கக்கூடாது. இதற்குரிய நடவடிக்கையை நகராட்சி நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றனா்.