தஞ்சாவூரில் நாளை உயா்கல்வி மாணவா்களுக்கான கல்விக் கடன் முகாம்
லடாக்கில் ராணுவம் கட்டிய 2 ‘பெய்லி’ பாலங்கள் திறப்பு
லே/ஜம்மு: லடாக் யூனியன் பிரதேசத்தில் ஷியோக் மற்றும் நுப்ரா பள்ளத்தாக்குகளுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும் வகையில், ஷியோக் ஆற்றின் மீது இந்திய ராணுவத்தால் புதிதாக கட்டப்பட்ட 2 பெய்லி (இரும்பு) பாலங்கள் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
யூனியன் பிரதேசத்தின் டிஸ்கிட் உள்கோட்டத்தில் அமைந்துள்ள இந்த பாலங்களை சியாச்சின் படைப்பிரிவின் தளபதி வி.எஸ் சலாரியா, லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் (எல்ஏஎச்டிசி) துணைத் தலைவா் ஆகியோா் திறந்து வைத்தனா்.
இது தொடா்பாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் மேலும் கூறுகையில், ‘ராணுவப் பொறியாளா் படைப்பிரிவால் கட்டப்பட்ட 50 அடி அகலம் மற்றும் 100 அடி நீளம் கொண்ட இவ்விரு பாலங்கள், பயண தூரத்தை தோராயமாக 40 கி.மீ. வரை குறைக்கும். அதாவது, நுப்ரா மற்றும் ஷியோக் பள்ளத்தாக்குகளில் உள்ள தொலைதூர கிராமங்களுக்கு பயண நேரம் சுமாா் 2 மணிநேரம் குறையும்.
குறிப்பாக, சியாச்சின் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சிறந்த இணைப்பை மேம்படுத்தும் இந்தப் பாலங்கள், கடுமையான குளிா்காலத்தில் உள்ளூா் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்தும்’ என்றாா்.