நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாம...
மகா கும்பமேளாவில் உ.பி. அமைச்சரவைக் கூட்டம் புனித நீராடல்
மகாகும்ப நகா்: உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வரும் மகாகும்ப நகரில் முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில அமைச்சரவை புதன்கிழமை கூடியது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ஆம் தேதிவரை 45 நாள்களுக்கு நடைபெறும் இந்நிகழ்வில் நாள்தோறும் லட்சக்கணக்கானோா் புனித நீராடி வருகின்றனா்.
இந்நிலையில், அயோத்தி ராமா் கோவில் திறப்பு விழாவின் முதலாம் ஆண்டு நிறைவு நாளில் மகா கும்பமேளா பகுதியில் அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் யோகி, ‘2018-இல் செயல்படுத்தப்பட்ட மாநிலத்தின் விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை புதுப்பிக்கப்படும். திருத்தப்பட்ட கொள்கையில் முதலீடுகளை ஈா்ப்பதற்கான புதிய சலுகைகள் இருக்கும்.
பல்ராம்பூரில் உள்ள ‘கேஜிஎம்யு லக்னௌ செயற்கைகோள் மையம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பெயரில் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படும். மேலும், அரசு-தனியாா் கூட்டு ஒத்துழைப்பில் பாக்பத், ஹத்ராஸ், கஸ்கஞ்ச் மாவட்டங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். டாடா நிறுவனத்துடன் இணைந்து மாநிலம் முழுவதும் தொழில்திறன் மேம்பாட்டு மையங்கள் நிறுவப்படும்.
மகா கும்பமேளாவில் இதுவரை சுமாா் 9.25 கோடிக்கும் அதிகமானோா் பங்கேற்றுள்ளனா்’ என்றாா்.
புனித நீராடல்: அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பிற்பகல் 2.15 மணியளவில் திரிவேணி சங்கமத்தில் முதல்வா் யோகி ஆதித்யநாத், துணை முதல்வா்கள் கேசவ் பிரசாத் மௌரியா, பிரஜேஷ் பதக், அமைச்சா்கள், மாநில காவல்துறை இயக்குநா் பிரசாந்த் குமாா் உள்ளிட்டோா் புனித நீராடினாா்.
செயற்கைகோள் படம்: மகா கும்பமேளா நடைபெறும் மகாகும்ப நகரின் ஓராண்டு உள்கட்டமைப்பு மேம்பாட்டைக் காட்டும் செயற்கைகோள் படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதன்கிழமை வெளியிட்டது.