Thai Amavasai | தை அமாவாசை தர்ப்பணம் செய்ய முடியாத சூழலில் மாட்டிக்கொண்டால் என்ன...
`ரசனை உயர்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல...' - யுகபாரதியின் `மஹா பிடாரி' கவிதைத் தொகுப்பு
காதல் கவிதை என்றாலே கஃபே, கடல், உயர்தர ஹோட்டல், திரையரங்கு என பெரும்பாலும் இவைகளை வைத்தே எழுதப்படும். ஆனால், யுகபாரதி சாராய நெடியும், மாமிச வாடையும் என எளிய மனிதர்கள் வாழ்வுடன் ஊடாடும் காதலையும், இதுவரை பேசப்படாதவர்களின் காதலையும் கவிதைகளாக வடித்து, அவற்றைத் தொகுத்து `மஹா பிடாரி' என்ற நூலை படைத்திருக்கிறார். விகடன் குழுமம் மற்றும் ராமாபுரம் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த நூலின் வெளியீட்டு விழா நேற்று சென்னை ராமபுரத்திலுள்ள எஸ்.ஆர்.எம் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் ஜி. செல்வா, " `என்னுடைய கவிதைகள் வர்க்க அடுக்கில் கீழ் உள்ளவரின் ரசனைகளும், ரம்மியங்களும் எப்படி எல்லாம் விளிகின்றன என்பது மட்டுமே.' என்கிறார் யுகபாரதி. இவர்தான் நமக்கானவர். இந்தக் கல்லூரியில் கூட்டிப் பெருக்குகிறவர்கள், வெளியே சாப்பாட்டுக் கடை வைத்திருப்பவர்களைப் பற்றி எழுதி, ரசனை என்பது உயர்தட்டு மக்களுக்கானது மட்டுமல்ல என்று அதைப் பறைசாற்றுகிறார் யுகபாரதி. ஒரு கவிதையில் ஐயப்பன் சாமியையும் தன் காதலுக்கு வம்புக்கு இழுக்கிறார். இன்று சாமியைக் கேள்வி கேட்டால் கைது செய்துவிடுவர். ஆனால், நம்முடைய மரபு, சாமிகளைக் கேள்வி கேட்பதுதானே.
தன் காதலி தினமும் கோவில் செல்வதால் அர்ச்சகர் ஆகியாவது அவளைப் பார்க்கலாம் என்ற கவிதையில் சமூக நீதி அரசியலைக் கவித்துவத்தோடு சொல்கிறார். வெறும் காதல் மட்டுமல்ல இதில் அரசியல், சமூக கருத்துகளும் அடங்கியுள்ளது. வெற்றி பெற்ற காதல் மட்டுமல்ல ஆணவக்கொலையால் பயந்த காதல், இறுதியில் இணையாது போன காதல் என பலவற்றை எழுதியுள்ளார்.
`புளியம் பூக்குவியலாக மண்டிக்கிடந்த அரசினர் விடுதியில், அவளுக்கு அவன் எதையோ சொல்ல விரும்பினான். கோடை மாதத்திலும் கூந்தலை உணர்த்த அவளும் ம்ம் கொட்டி அடிக்கொருதரம் முந்தியைச் சரி செய்தாள். அந்த அவள் தான் பின்னொரு பெருமழையில் வேறொரு புளியமரத்தில் பிரேதமாய் தொங்கியவள்.' என்ற கவிதை, சாதியத்தின் முகத்தையும் காதலின் வலியையும் பேசக்கூடியதாக இருக்கிறது.
கம்யூனிஸ்ட்டாக எனக்குப் பிடித்த கவிதையும் இதில் உள்ளது. எங்கிருந்தோ வந்து எச்சமிட்ட குருவிக்கு ஒரு காம்ரேடின் புரட்சிகர காதல் செயல்பாடுகள் புரிவதேயில்லை. யுகபாரதி எல்லா தலைமுறைகளுக்கும் எழுதியுள்ளார் அது தேவையில்லாமல் ஒட்டப்பட்டது போல் அல்லாமல் இயல்பாக எழுதியுள்ளார் " என்று பேசினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய அனைத்திந்திய மாணவப் பெருமன்றத்தைச் சேர்ந்த மார்க்சியா, "உலக மொழிகளில் அதிகம் எழுதப்பட்டது கவிதைகள்தான். அதிலும் அதிகமானது காதல் கவிதைகள்தான். நான் படித்த முதல் காதல் புத்தகம் மஹா பிடாரி. ஆணாதிக்க சமூகம் அவர்களின் பெருமையைக் கவுரவத்தை பெண்ணின் கருப்பையில் தான் வைத்துள்ளது. இதிலிருந்து வரும் வாரிசு என் சாதியினராக இருக்க வேண்டும். என் சொத்து என் சாதியினருக்குத் தான் போக வேண்டும் என்பது தான் ஆணவம் அதனால் செய்யப்படுவது தான் ஆணவப்படுகொலை. இதைத் தடுக்க இன்னும் சிறப்பு சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம்தான்.
காதல் கவிதைகள் என்ற கண்ணோட்டத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது, சமூகத் தளத்தில் பதிந்திருப்பதைத் தோழர் யுகபாரதி சொல்லியிருப்பது அருமையாக இருக்கிறது. கவிஞராகப் பார்த்த யுகபாரதியிடம் தோழராக நெருங்க வைத்தது காம்ரேடின் புரட்சிகர காதல் பற்றிய கவிதைதான். `அற்புத விளக்கு என்று தானே கதையில் சொல்லப்படுகிறது? பிறகு ஏன் அதிலிருந்து தெய்வம் வராமல் பூதம் வருகிறது.' என்ற கவிதை வினோதமாக இருந்தது.
அதுபோல, சாதியத்தைப் பக்குவமாகக் கையாண்டு கவிதை எழுதியுள்ளார். காதல், அரசியல், சமூக நீதி, கம்யூனிசம், பெண்ணியம் இவைகளோடு வரலாற்றுச் சிந்தனையையும், இந்தி எதிர்ப்பு போராட்டத்தோடு தொடர்புப்படுத்திய கவிதையில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஓய்வு நேரங்களில் கூட மாணவர்கள் உங்களது புத்தியைப் புத்தக வாசிப்பின் மூலமாகத் தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இந்த சமூகத்திற்கான மாற்றத்தையும் அதை வைத்துதான் கொண்டுவர முடியும்" என்று பேசிமுடித்தார்.
அதைத்தொடர்ந்து, மாணவர்களும் கவிதை நூலிலுள்ள தங்களுக்குப் பிடித்த கவிதைகளை யுகபாரதியிடம் வாசித்துக் காட்டி தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்தனர். இறுதியாக, ``எல்லாவற்றையும் விட மேலானது, சம்பாதிக்க முடியாதது அன்பு ஒன்றுதான். அந்த அன்புக்கு ஆதாரமாக அமைந்த இந்த விழாவை ஒருங்கிணைத்த விகடன் குழுமத்தினருக்கும், எஸ்.ஆர்.எம் கல்லூரி நிர்வாகத்துக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என யுகபாரதி பேசி முடித்தார்.