தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் தமிழக மாணவிகள் சாதனை; அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகமும், கல்வி அமைச்சகமும் இணைந்து இந்தியா முழுவதும் உள்ள 3 முதல் முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 'வீர கதா 4.0' என்ற திட்டத்தின் கீழ் கவிதை, கட்டுரை எழுதுதல் மற்றும் வண்ணம் தீட்டுதல் போட்டிகளை நடத்தின. விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்களை போற்றும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை பள்ளிகளைச் சேர்ந்த 5 மாணவிகள் இந்திய அளவில் தேர்வாகினர்.
திண்டிவனம் வி.கே.எம் வித்யாலயா மாணவர் குரு பிரசாத், திருவாரூர் ஶ்ரீ ஜி.ஆர்.எம் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி மாணவி ஆருவி யுனிஸ்டி, ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவி பிருந்தா, குளித்தலை புனித டோமினிக் சேவியோ மெட்ரிக் பள்ளி மாணவி சத்யா ஶ்ரீ, ரெட் பீல்ட்ஸ் விமானப்படை பள்ளி மாணவி மெர்லின் சுவனிதா ஆகியோர் வண்ணம் தீட்டுதல், பத்தி எழுதுதல், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வென்றனர்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசுகள் வழங்கினார். இதனை தொடர்ந்து போட்டிகளில் வென்ற ராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் அரசு மாதிரிபள்ளி மாணவி பிருந்தா உள்ளிட்ட 5 பேரும் டெல்லியில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த 3 பள்ளி மாணவிகள் உள்ளிட்ட 5 பேருக்கும் அவர்களுக்கு வழிகாட்டி ஊக்குவித்த ஆசிரியர்கள் வளர்மதி உள்ளிட்டோருக்கும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார்.