கருக்கலைப்புக்கான மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்கவோ கூடாது: கரூா் சரக மருந்த...
``ஒலிம்பிக்கில் விளையாடுவதே லட்சியம்..." - தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக மாணவி
தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில், இரண்டு தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திருக்கும் தூத்துக்குடி மாவட்ட 8-ம் வகுப்பு மாணவி தன்யா, ஒலிம்பிக்கில் விளையாடி நாட்டுக்கே பெருமை சேர்க்க வேண்டும் இரு லட்சியம் கொண்டிருக்கிறார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பையா வித்யாலயம் மாணவியர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் தன்யா. இவர், கடந்த ஆண்டு நவம்பரில் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு, நீளம் தாண்டுதலில் 5.35 மீட்டர் நீளத்தையும், உயரம் தாண்டுதலில் 1.55 மீட்டர் உயரத்தையும் தாண்டி இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தார்.
இதன் மூலம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்ற (ஜனவரி 11 - 14), இந்தியாவின் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பால் நடத்தப்பட்ட இந்த தேசிய அளவிலான 68-வது தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டார். இதில், 14 வயதுக்குட்பட்ட மகளிருக்கான பிரிவில் நீளம் தாண்டுதலில் 5.32 மீட்டர் நீளத்தையும், உயரம் தாண்டுதல் 1.60 மீட்டர் உயரத்தையும் இரண்டிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார் தன்யா.
அம்மா, அப்பாதான் காரணம்!
இவரிடம் பேசுகையில், விளையாட்டு மீதான தனது ஆர்வம் பற்றி பேசிய தன்யா, ``அப்பா (சதீஷ்) பூப்பந்தாட்டம் மீது ஆர்வமுடையவர். அம்மா (வத்ஷலா) நீளம் தாண்டுதல், ஓட்டப் பந்தயம், ஹர்டில்ஸ் ஆகியவற்றின்மீது ஆர்வமுடையவர். அப்பா, அம்மா இருவரும் கொடுத்த ஊக்கமும், ஆதரவுமே தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதிக்கக் காரணம்." என்றவர்...
``அப்பா, அம்மாவைப் பிரிந்து விடுதியில் தங்கி தடகளப் போட்டிகளுக்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறேன். அவர்களைப் பிரிந்திருக்கும் கவலையை மகிழ்ச்சியாய் மாற்ற, இன்னும் பல தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று அவர்களுக்குப் பெருமை சேர்க்க விரும்புகிறேன். அதுமட்டுமல்லாமல், வருங்காலத்தில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் வீராங்கனை ஆக விரும்புகிறேன்" என்று தனது லட்சியத்தைப் பற்றியும் கூறினார்.
கடின பயிற்சியே வெற்றிக்கான மந்திரம்!
தொடர்ந்து, தனது வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பள்ளியின் தலைமையாசிரியை உட்பட பள்ளியின் பிற ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த தன்யா, ``என்னுடைய திறமையை ஆதரிக்கும் வகையில், பள்ளி சார்பாக நேர தளர்வு, பள்ளிக் கட்டணம், விடுதிக் கட்டணத்தில் சலுகை, போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயண செலவுகளைப் பள்ளி நிர்வாகமே ஏற்று வருவது, மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், பள்ளி நிர்வாகத்தின் சிறந்த வழிகாட்டுதலால், படிப்பில் கவனம் செலுத்திக் கொண்டே, இன்னும் பல சாதனைகள் படைக்க ஊக்கம் கிடைக்கிறது.
பள்ளியின் தலைமையாசிரியை சாந்தினி கௌசல், உடற்கல்வி பயிற்சியாளர் பத்மநாபன், உடற்கல்வி ஆசிரியை பத்மா ஆகியோரே எனது வெற்றிக்கு பின்புலமாக அமைந்த தூண்கள். இவர்களுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம், வெற்றி பெற விரும்பும் அனைவரும் கடின பயிற்சி மற்றும் முயற்சி செய்ய வேண்டும். அதுவே வெற்றிக்கான மந்திரம்." என்று கூறியவர், அடுத்த மாதம் (பிப்ரவரி) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள நிசாம் தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கத் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
விடுமுறை நாள்களில் கூட தவறாமல் பயிற்சியில் ஈடுபவார்!
பள்ளியின் சார்பில் ஜனவரி 20 அன்று தன்னை வரவேற்க நடத்தப்பட்ட வரவேற்பு விழா குறித்துப் பேசுகையில், ``எனது பெற்றோர்கள் முன்னிலையில், சுமார் 3,500 பள்ளி மாணவியர் கூடி கைதட்டி என்னை வரவேற்றனர். தலைமையாசிரியை சந்தன மாலை அணிவித்தார், உடற்கல்வி ஆசிரியை கிரீடம் அணிவித்தார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூங்கொத்து கொடுத்தார், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பொன்னாடை போர்த்தினார். பள்ளியின் சார்பிலும் கோப்பைகள் வழங்கினர்." என்று நெகிழ்ந்தார்.
தன்யா குறித்துப் பேசிய தலைமையாசிரியை சாந்தினி கௌசல், உடற்கல்வி ஆசிரியை பத்மா ஆகியோர், ``தன்யா மிக இளம் வயதிலேயே சிறந்த தடகள வீராங்கனையாக உள்ளார். இளம் வயதிலேயே பலவற்றைத் தியாகம் செய்து, தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அரையாண்டு விடுமுறை நாள்களில் கூட தவறாமல் தினமும் பயிற்சி செய்தது பாராட்டுக்குரியது." என்று பெருமை கொண்டனர்.
கடின பயிற்சியே வெற்றிக்கான வழி என்று, தினமும் அதிகாலை 5.30 முதல் காலை 8.15 வரையிலும், மாலை 4.30 முதல் இரவு 8 வரை தீவிர பயிற்சி மேற்கொண்டுவரும் தன்யாவுக்கு மேலும் பல வெற்றிகள் குவிய வாழ்த்துகள்!