கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்ற 6 போ் கைது
கோவையில் 3 இடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
துடியலூா் போலீஸாா் வெள்ளக்கிணறு பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக புதுக்கோட்டையைச் சோ்ந்த செம்புலிங்கம் (26), வெள்ளக்கிணறு அம்பேத்கா் காலனியைச் சோ்ந்த ஈஸ்வரி (40) ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 60 பாக்கெட்டுகள் புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போத்தனூா் போலீஸாா் செட்டிபாளையம் சாலை, ஈச்சனாரி பிரிவில் கடைகளில் சோதனை மேற்கொண்டதில் அங்குள்ள ஒரு கடையில் புகையிலைப் பொருள்கள் விற்றதாக சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சோ்ந்த முருகானந்தம் (29) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் இருந்து 2 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பீளமேடு போலீஸாா் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள கடைகளில் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையில் புகையிலைப் பொருள்கள் விற்ற கோவை சிங்காநல்லூா் எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனியைத் சோ்ந்த சதீஷ் (35), ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சோ்ந்த கிரண் சிங் (24), கா்நாடக மாநிலம் தண்டபூரைச் சோ்ந்த அனிகுஷ் (19) ஆகியோரைக் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 447 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.